தமிழ்நாடு

”உலகம் முழுவதும் தமிழர்களின் திறமைக்கு தனி மதிப்பு இருக்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!

உலகம் முழுவதும் தமிழர்களின் திறமைக்கு தனி மதிப்பு இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”உலகம் முழுவதும் தமிழர்களின் திறமைக்கு தனி மதிப்பு இருக்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (11.1.2025) சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவினையொட்டி அமைக்கப்பட்டுள்ள அயலக தமிழ்ச்சங்கங்கள், சுற்றுலா, மருத்துவம், தொழில் அரங்கங்கள் உள்ளடக்கிய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு, சிறப்புரையாற்றினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

தமிழ்நாடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக அயலகத் தமிழர் தின நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த வருடம், அயலகத் தமிழர் தின நிகழ்வுகளை ‘தமிழ் வெல்லும்’ எனும் கருப்பொருளில் நான்தான் தொடங்கி வைத்தேன்.

இந்த வருடம், ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற கருப்பொருளில் இந்த விழாவை நான் தொடங்கி வைக்கின்றேன். உலகின் பல்வேறு இடங்களில் இருந்து இங்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு வருக, வருகவென வரவேற்கிறேன்.

இந்த சிறப்புக்குரிய நிகழ்வில் நாளைய தினம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பங்கேற்று நிறைவு உரை ஆற்ற உள்ளார்கள். உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுடைய நலனை கருத்தில் கொண்டு, நம்முடைய திராவிட மாடல் அரசு, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையை 2021 ஆம் ஆண்டு உருவாக்கியது.

இந்த துறை தொடங்கப்பட்ட நாளிலிருந்து, இதன் செயல்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து கொண்டு வருகிறேன். ஒரு மாநில அரசின் துறை இந்த அளவுக்கு வெளிநாட்டில் இருக்கக்கூடிய நம் தமிழ் மக்களின் நலனுக்காக உழைக்க முடியுமா என்று சொல்கின்ற அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இத்தனை ஆயிரம் தமிழர்கள், இங்கே பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு இத்துறையின் செயல்பாடுகளே காரணம்.

இன்றைக்கு முத்தமிழறிஞர் கலைஞருடைய வழியில் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்காக தாய்த்தமிழ்நாட்டில் இருந்து உழைத்துக் கொண்டிருப்பவர்தான், நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

இங்கே அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, என 50-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து அரசுப் பொறுப்புகளில் உள்ளவர்கள், அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் வருகை தந்துள்ளீர்கள்.

வேர்களைத் தேடி விழுதுகள் வருவதைப் போல, தாய்மடியைத் தேடி பிள்ளைகள் வருவதைப் போல, தமிழ்நாட்டை நோக்கி நீங்கள் அனைவரும் வருகை தந்திருக்கின்றீர்கள்.

ஆகவே, உங்கள் அனைவரையும் நம்முடைய தமிழ்நாட்டில் சந்திப்பதில் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கின்றேன்.

இதுபோன்ற சந்திப்புகள்தான், நமக்கு இடையேயான உணர்வை, பாசத்தை இன்னும் அதிகமாக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன். அயலகத்தமிழர்கள் நலனில் நம்முடைய கழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

அதற்கு ஒரு உதாரணமாகத் தான் அயலகத் தமிழர் நல வாரியத்தை நம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதில் இன்றைக்கு கிட்டத்தட்ட 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.

உலக அளவில் தமிழர்களின் உழைப்பும், ஆற்றலும் இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் என உலகின் அனைத்து தலைசிறந்த நிறுவனங்களிலும், தமிழர்களின் திறமைக்கு தனி மதிப்பு இருக்கிறது. அங்கெல்லாம் முக்கியப் பொறுப்புகளில் தமிழ் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் தமிழ் மக்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் அயலகத் தமிழர் நலத்துறை உடனே களத்தில் இறங்கி மீட்டு எடுக்கின்றது. அதற்கு ஒரு உதாரணம். உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் ஆகியவற்றின் போது, அங்கு படிக்கும் மாணவர்களை நம்முடைய அரசு பத்திரமாக மீட்டு தமிழ்நாடு அழைத்து வந்திருக்கின்றது. இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 பேரை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்திருக்கின்றது.

தமிழ்நாடு வாழ் தமிழர்களுக்கு எப்படி திட்டங்கள் தீட்டப்படுகிறதோ, அதே போல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் பல்வேறு திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு தீட்டி செயல்படுத்தி வருகிறது. புலம் பெயர்ந்த மண்ணில் தமிழுக்காகப் பாடுபடும் தமிழ்ச்சங்கங்களுக்கு விருதுகள், கனியன் பூங்குன்றனார் பெயரில் விருது, தமிழ்மாமணி பட்டம் போன்றவை நம் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.

இந்த வருடம், புதிதாக வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களுக்கும் நமக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தமிழர்களுக்கு ‘சிறந்த பண்பாட்டுத் தூதுவர்’ என்ற விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பிள்ளைகள், தமிழ் மொழியை கற்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் நூல்களை வழங்கி, அவர்கள் தமிழ் கற்பதற்கான வாய்ப்புகளை திராவிட மாடல் கழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

அயலகத் தமிழர்களின் தமிழ் வளர்ச்சிப் பணிகளை போற்றுகிற வகையில், உலகத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு விருதுகளையும், பரிசுகளையும் கழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இப்படி இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் எங்குமுள்ள தமிழர்களுக்கும் உழைக்கின்ற அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக் கூடிய நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் நாசர் அவர்களுக்கும் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அயலகத் தமிழர் தினம் 2025 மிகப்பெரிய வெற்றியைப் பெறட்டும். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories