''பொங்கலோ பொங்கல்" என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. தமிழர் தம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ”1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்” என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.1.2025) சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் மூலம், 249.76 கோடி ரூபாய் செலவில் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.
மேலும், பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக்கடைகளில் இன்று (9.1.2025) முதல் 13.1.2025 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிக்கு கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித்துறையைச் சேர்ந்த சுமார் 50,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.