தமிழ்நாடு

”யாராக இருந்தாலும் நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்” : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

யாராக இருந்தாலும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.

”யாராக இருந்தாலும் நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்” : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், அண்ணாநகரில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை குறித்து,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்:-

பேரவைத் தலைவர் அவர்களே, அண்ணாநகரிலே நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக சில உறுப்பினர்கள் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கான விளக்கத்தையும் இங்கே நான் அளிக்க விரும்புகிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, அண்ணாநகர் வழக்கைப் பொறுத்தவரையில், பத்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களைத் தவறாக நடத்தியதாகவும், குற்றம் செய்த சதீஷ் என்பவரைக் கைது செய்யவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இவ்வழக்கு கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்படுகிற சதீஷும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.

இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை செய்த மேல்முறையீட்டில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்ற முடிவிற்கு வந்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு காவல் துறையிலிருந்தே மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு இப்போது இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த 103-வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ என்பவரையும் நேற்று கைது செய்து, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுதாகர் அதிமுகவில் வட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். அவரையும் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கிற ஒருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

நான் முன்பு விளக்கம் சொல்லிய சென்னை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் – நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன். அவர் தி.மு.கவில் உறுப்பினராக இல்லை. தி.மு.க. ஆதரவாளர். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன், அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், தி.மு.க.-வினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர் தி.மு.க. உறுப்பினர் அல்ல; தி.மு.க. அனுதாபி. அதுதான் உண்மை. எது எப்படியிருந்தாலும், குற்றவாளியை நாங்கள் காப்பாற்றவில்லை. உடனடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளதோடு, குண்டர் சட்டத்திலும் அடைத்திருக்கிறோம். எனது அரசைப் பொறுத்தவரையில், எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, ஏன் காவல் துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, நாங்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

ஆகையால், எதிர்க்கட்சி நண்பர்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, குற்றச்செயல் எதுவாக இருந்தாலும், குற்றவாளி யாராக இருந்தாலும், நேர்மையாக, நியாயமாக, கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் இந்த அரசைக் குறை கூறாமல், பெண்களின் பாதுகாப்பிற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நீங்கள் அனைவரும் இந்த அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories