நாடு முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவின்போது, தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடி ஏற்றுவார். தொடர்ந்து முப்படைகளின் அணி வகுப்புகள், ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக பல்வேறு மாநிலங்களின் கலாச்சரங்களை பிரதிபலிக்கும்விதமாக அலங்கார ஊர்தி ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெறும்.
கடந்த 2022-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கியிருந்தன. ஆனால் இந்த ஊர்திகள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தெரிவித்திருந்தனர். ஆனால் ஒன்றிய அரசுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, இதே அலங்கார ஊர்தி, சென்னையில் நடைபேற்ற அணிவகுப்பில் பங்கேற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தி டெல்லி அணிவகுப்பில் பங்கேற்றது.
இந்த அலங்கார ஊர்தியில் தமிழ் பாட்டி ஒளவையார், ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய வீர மங்கை வேலு நாச்சியார், பெண்களுக்காக போராடிய முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்டோரின் உருவ பொம்மைகள் இடம்பெற்றது. மேலும் தமிழ்நாட்டின் முக்கிய அடையாளமான தஞ்சை பெரிய கோயிலும் இடம்பெற்றது.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு (2024) குடியரசுத் தின விழாவிலும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. இந்த ஊர்தியானது பழங்கால தமிழ்நாட்டின் தேர்தல் நடைமுறையை விளக்கும் வகையில் 'குடவோலை கண்ட தமிழ்க் குடியே' என்ற பாடலுடன் கம்பீரமாக சென்றது. இந்த அலங்கார ஊர்தி அங்கிருந்தவர்களை கவர்ந்து ஈர்த்தது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டில் (2025) நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு பங்கேற்க இயலாத நிலையில், இதற்கு காரணமா தமிழ்நாடு அரசு தான் என்று குற்றம்சாட்டி போலியான செய்தியை பரப்பி வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இதன் உண்மைத் தன்மையை தமிழ்நாடு Fact Check தற்போது வெளி கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு,
ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். தமிழ்நாடு அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில், இது முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு Fact Check ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு Fact Check தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது.
2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது.