பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க., ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடரில் அதானி மீதான குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரம் ஆகியவை குறித்து விவாதிக்க மறுத்ததை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் நாள்தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் அனைவரும் அணி திரண்டு குரல் எழுப்பி ஊர்வலமாக நாடாளுமன்றத்திற்கு வருவது நடைமுறையாக இருந்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் வழக்கம் போல் அம்பேத்கர் படங்களை தாங்கிக் கொண்டு மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் ஜெய்பீம் கோஷத்தை முழங்கிக் கொண்டு ஊர்வலமாக நாடாளுமன்றத்திற்கு உள்ளே நுழைய முற்பட்டனர்.
நேற்று திடீரென அதை தடுப்பதற்காகவே பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற நுழைவு வாயிலை ஆக்கிரமித்துக் கொண்டு எதிர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களை உள்ளே நுழைய விடாமல் பலவந்தமாக தடுத்து வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இத்தகைய சூழலில் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பலவந்தமாக கீழே தள்ளப்பட்டதால், அவரது காலில் காயம் ஏற்பட்டது. ராகுல்காந்தி அவர்களையும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தாக்க முற்பட்டுள்ளனர். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசியதால் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் உருவாகி வருவதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே இந்தியா கூட்டணி கட்சியினரையும், 80 வயது நிரம்பிய மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை தாக்க முற்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் அதானி, மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க மறுத்து வருகின்றனர். அரசமைப்புச் சட்ட 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விவாதத்தில், தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரையை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இன்றைய பா.ஜ.க.வின் மூதாதையர்களான சாவர்க்கர், கோல்வால்க்கர் ஆகியோர் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்து மனுஸ்மிருதியை தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம், அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறியதை தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் ஆதாரத்துடன் மேற்கோள் காட்டி அம்பலப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. எம்.பி.க்கள், காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களை தாக்க முற்பட்டது குறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாக காவல்துறையினரிடம் குற்றவியல் சட்டம் 2013-ன்படி உறுப்பு 114, 115, 116-ன்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மை நிலை இப்படியிருக்க, பா.ஜ.க.வை சேர்ந்த இரு மக்களவை உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக நாடகமாடி வருகிறார்கள். மல்லிகார்ஜுன் கார்கே தாக்கப்பட்டதை திசைத் திருப்புவதற்காகவே இத்தகைய நாடகத்தை பா.ஜ.க.வினர் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
எனவே, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள், கருத்து மோதல்கள் நடைபெறுவதற்கு பதிலாக மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்காந்தி ஆகியோரை வன்முறை நோக்கத்துடன் தாக்க முற்பட்ட பா.ஜ.க.வினரை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவிற்கு விடுதலையை பெற்றுத் தந்து, டாக்டர் அம்பேத்கர் மூலம் அரசமைப்புச் சட்டத்தை வழங்கி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி, மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, ஜனநாயகத்தை காப்பாற்றுகிற முயற்சியின் விளைவாகவே மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்களை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி இன்றைக்கு நடத்துகிறது. எனவே, இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும் குரல் எழுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.