தமிழ்நாட்டு மக்கள் தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வித்திறனைப் பெற தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில், மாநில அளவில் நூலகங்களும், அறிவுசார் மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன் படி, சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் அதிநவீன நூலகங்களும், அறிவுசார் மையங்களும் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சியிலும் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் படி, திருச்சியில் நூலகம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல் கோட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரை மற்றும் 7 தளங்கள் கொண்டதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
காவிரிக் கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜுன் 27ம் நாள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக இந்நூலகம் அமைந்திடும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.