தமிழ்நாடு

”பேரிடர் நிதியுதவி வழங்காத கல் நெஞ்சம் கொண்ட பா.ஜ.க அரசு” : கனிமொழி MP ஆவேசப் பேச்சு!

தமிழ்நாட்டிற்கு உரிய பேரிடர் நிவாரண நிதி வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்து வருகிறது என கனிமொழி MP குற்றம்சாட்டியுள்ளார்.

”பேரிடர் நிதியுதவி வழங்காத கல் நெஞ்சம் கொண்ட பா.ஜ.க அரசு” : கனிமொழி MP ஆவேசப் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி ஒன்றிய அரசின் பேரிடர் மேலாண்மை 2024 மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்களவையில் பேசினார்.

அதன் முழு விவரம் வருமாறு:-

நான் இந்த மசோதாவை எதிர்க்க விரும்புகிறேன். இந்த மசோதா இந்த அவைக்கு வரும்முன் சிந்தித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதில் பல்வேறு விசயங்கள் விடுபட்டுள்ளன. இது நிவாரணம் தருவதைவிட அதிகமாக பாதிப்பையே தருகிறது. தொடர்ச்சியான பருவநிலை மாற்றம் இயற்கை பேரிடர்களை அதிகப்படுத்தியுள்ளது. உலகின் வெப்பநிலை அதிகமாகியுள்ளது. வெள்ளம், புயல், காட்டுத்தீ போன்ற பேரிடர்களால் உலகம் முழுவதும் மக்கள் அதிகளவில் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது நாம் பேரிடர் மேலாண்மையை தீவிர பிரச்சினையாக பார்க்கவேண்டும்.

ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்படும்போது ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்குவதாக பெருமையாக கூறுகிறீர்கள். ஆனால் அந்த தொழில்நுட்பங்களை ஒன்றிய அரசு சரியாக பயன்படுத்துவதில்லை. அவர்கள் வழங்கும் முன்னெச்சரிக்கை ஜோசியம் பார்ப்பதுபோல்தான் உள்ளது. நூற்றியம்பது கிமீ தொலைவில் புயல் வந்த பின்னால்தான் ஒன்றிய அரசினால் எச்சரிக்கை வழங்க முடிகிறது. அதை வைத்து மக்களை உடனடியாக அப்பகுதிகளில் இருந்து பாதுக்காப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நேரம் போதுவதில்லை.

ஒன்றிய அரசின் ரேடார் அமைப்பை மேம்படுத்தவேண்டும். மற்ற நாடுகள் புயல் 300 கி.மீ தொலைவில் உருவாகும்போதே கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடுகின்றனர். நாமும் அதேபோல் செய்தால்தான் மாநில அரசுகள் மக்களை உரிய நேரத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.

பிரதமர் தன்னை விஷ்வகுரு என்று அழைத்துக்கொள்கிறார். உலகுக்கே தாங்கள்தான் வழிகாட்டி என்று சொல்லிக்கொள்பவர்கள் செயற்கை நுண்ணறிவு, செயற்கைகோள் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டுகூட ஒரு பேரிடரை சரியாக கணிக்க முடியாதவர்களாக இருப்பதோடு ஏழை மக்கள், விவசாயிகள் அதிகமாக பேரிடர்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற கவலையும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

பெரும்பான்மையான தேசிய ஜனநாயக கூட்டணியின் மசோதாக்களை போலவே இந்த மசோதாவும் மாநில உரிமைகளுக்கு எதிரானது. பேரிடர் மேலாண்மை மாநிலங்கள் செயல்படுத்துவது, ஆனால் மாநிலங்களின் ஆலோசனை பெறாமலே மசோதா உருவாக்கப்பட்டிருப்பது பேரிடர் மேலாண்மையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஒன்றிய அரசு வெளியிடும் எச்சரிக்கை தகவல்கள் போதிய தரவுகளுடன் இருக்க வேண்டும், உதாரணத்திற்கு ஒரு மதகு, குளம் உடைப்பு ஏற்பட்டால் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் எனுமளவுக்கு தரவுகள் தெளிவாக இருக்க வேண்டும்.

ஆனால் ஒன்றிய அரசு தரவுதளங்களை மாநில அரசுகளால் அணுக இயலாததாக இருக்கின்றன.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு போதிய நிவாரண நிதியை வழங்குவதில்லை. மிக்ஜாம் புயலின்போது 37,902 கோடி ரூபாய் நிதியுதவி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டியிருந்தது. ஆனாலும் ஒன்றிய அரசு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. அதேபோல் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கும் ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை.

44 A பிரிவின்கீழ் மாநில பேரிடர் நடவடிக்கை அமைப்பை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் அதற்கு யார் நிதி வழங்குவார்கள் என குறிப்பிடவில்லை. அந்த பலுவும் மாநில அரசின்மீது விழும் என அச்சமாக இருக்கின்றது.

ஆண்டுதோறும் வெப்பத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெப்ப அலையை மாநில அளவிலான பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான்கு லட்சம் வரையில் மாநில அரசு வழங்குகிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாய் இருக்கும் இதைத்தான் நாங்கள் திராவிட மாடல் அரசு என்கிறோம்.

தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கக்கூடிய காரணத்தினாலும், மக்களை பற்றி கவலைப்படக்கூடிய காரணத்தினாலும் ஒன்றிய அரசு எங்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது.

ஒன்றிய அரசு எங்களை பார்த்து இரண்டு கைகளையும் விரித்துவிட்டது. பக்கத்து மாநிலமான கேரளாவுக்கும் அதே நிலைமைதான்.

பல ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை இழந்து குழந்தைகளோடு தெருவில் கண்ணீரோடு நின்றுகொண்டிருக்கிறார்கள், ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ரூபாய்கூட தராமல் கல்நெஞ்சோடு நடந்துகொண்டிருக்கிறது. இது தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல். இதற்கு விரைவிலேயே தக்க பாடம் சொல்லித்தரப்படும்.

banner

Related Stories

Related Stories