தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (டிச.09) தொடங்கிய நிலையில், முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கேள்வி - பதில் நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதையடுத்து மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடும் ஒன்றிய அரசுக்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று (டிச.10) இரண்டாம் நாள் கூட்டத்தொடர் பேரவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி - பதில் நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அந்த வகையில் அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி, தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் பிறந்தநாளை 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக' அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
கே.பி.முனுசாமி அவர்கள் இங்கே ஒரு கோரிக்கையை வைத்து, அந்தத் துறையினுடைய அமைச்சர் அவர்களும் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். டாக்டர் உ.வே. சாமிநாதர் அவர்களின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். முதலமைச்சர் அவர்களும் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள்.
அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் டாக்டர் உ.வே. சாமிநாதர் அவர்களின் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என்பதை நான் உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில், இன்று நம்முடைய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதர், 1855 பிப்ரவரி, 19 - அன்று பிறந்தார்; 1942, ஏப்ரல் 28-ல் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.