தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (டிச.09) தொடங்கிய நிலையில், முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கேள்வி - பதில் நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதையடுத்து மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடும் ஒன்றிய அரசுக்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று (டிச.10) இரண்டாம் நாள் கூட்டத்தொடர் பேரவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி - பதில் நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது துணை பட்ஜெட் மீதான விவாதத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி 10.5% இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், "தற்கால தரவுகளின் அடிப்படையில் தான் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு எடுத்தால் மட்டுமே இந்த உள் ஒதுக்கீட்டை வழங்க முடியும். எனவே இந்த கணக்கெடுப்பை எடுக்க ஒன்றிய அரசுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும்" என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை உங்கள் அதிமுக கூட்டணி முறையாக கொண்டு வரவில்லை. திமுக ஆட்சி அமைந்த பிறகு, தவறை திருத்தி முறையாக செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இதற்கு தடை வாங்கப்பட்டிருக்கிறது. இது யாருடைய தவறு?" என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவையை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரால் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட்டங்களுக்கு எதிராக யாராலும் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்க முடியவில்லை. ஆனால் உங்கள் அதிமுக கூட்டணியில் தேர்தல் ஸ்டண்டுக்காக அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு என்பதால்தான் இத்தனை பிரச்னைகள்." என்றார்.