நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி அரசு வழங்கும் உதவி தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது.
சமீபத்தில் நடைமுறைக்கு வந்த மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டை வைத்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும் மாதந்தோறும் 1000 ருபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இது போன்ற காரணங்களால் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்தவர்களில் 1,54,500 நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும், 1,28,373 நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மேலும், 6, 640 நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.