ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியது பாஜக அரசு.இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் போராட்டத்தை விடாத விவசாயிகள் ஹரியானா எல்லையான ஷம்பு,கிநோரி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தங்கி கடந்த 10 மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு ஏற்க மறுத்த நிலையில், விவசாயிகள் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். எனினும் விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுவதை தடுக்க ஹரியானா பாஜக அரசு சாலைகளில் முள்வேலி தடுப்பு, ஆணி தடுப்புகளை அமைத்துள்ளது.
எனினும் அந்த தடுப்புகளை அகற்றி விவசாயிகள் தொடர்ந்து டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனிடையே போலீஸ் தாக்குதலில் நேற்று காயம் அடைந்த சுமார் எட்டுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலைக்குள் பேச்சு வார்த்தைக்கு ஒன்றிய அரசு அழைக்காவிட்டால் நாளை மீண்டும் போராட்டம் என்று விவசாயிகள் அமைப்பினர் கெடு விடுத்துள்ளனர். இதனால் டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.