சென்னை எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல மையத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் - 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்...
தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சென்னையில் கனமழை இருந்ததால் டிசம்பர் 1 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால் இன்று மிக சிறப்பாக நடைபெற்று உள்ளது.இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் "Take the Rights Path", அதாவது, "உரிமைப் பாதையில்" என்பதாகும். ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே, எச்.ஐ.வி/எய்ட்ஸை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.
தமிழ்நாட்டில் எச்.ஐ.வின் தாக்கும் படிப்படியாக குறைந்து வருகிறது. முழு அளவில் எய்ட்ஸ் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்கு தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் எயிட்ஸ் நோயை கண்டறிவதற்காக 3,161 பரிசோதனை மையங்கள் உள்ளது" என்று கூறினார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " எய்ட்ஸ் பாதிப்பு இந்தியாவில் 0.23 சதவீதமாக உள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டில் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக அது 0.16 சதவிதமாக உள்ளது. இதை பூஜ்ஜியமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரால் கடந்த 2009 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் மூலம் இதுவரை 7,303 குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்பு வரும் காலங்களில் பெரிய அளவில் குறையும். சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 73,560 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 748 பேருக்கு புதிய எய்ட்ஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசின் சார்பில் கூட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.