ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று (நவம்பர் 30) அதிகாலை முதல் அதிக வேகத்துடன் சென்னை முழுவதும் பலத்த காற்று வீசியது. குறிப்பாக புயலின் தாக்கம் காரணமாக சென்னை முழுவதிலும் 60 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பட்டினப்பாக்கம் லூப் சாலை முழுவதும் கடற்கரையில் இருந்த பெரும்பாலான மணல் சாலை முழுவதும் பரவியது.
இதனால் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் பயணம் செய்தனர். இதனை அரசுக்கு தெரியப்படுத்திய நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் உள்ள மணலை அகற்றினர்.
பட்டினம்பாக்கம் முதல் சீனிவாசன் நகர் வரை இணைக்க கூடிய லூப் சாலை முழுவதும் உள்ள மணல்களை முற்றிலுமாக அகற்றி மீண்டும் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னை லூப் சாலையில் தூய்மைப்பணி நிறைவுற்று, இயல்பான போக்குவரத்து திரும்பியது. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளால், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இயல்பு நிலை வெகுவாக திரும்பி வருகிறது.