தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கனவு ஆசிரியர் விருதுக்கான பரப்புரை துவக்கி வைக்கப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், ஆசிரியர்களது விருப்பத்திற்கேற்ப 42 பாடப் பிரிவுகளின் கீழ் இவ்விருதுக்கு 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 16,247 பேர் இவ்விருது தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
முதல்கட்டமாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி ஆசிரியர்களின் பொதுவான கற்பித்தல் சார் அறிவு மற்றும் திறனை மதிப்பிட இணையவழியே தேர்வு நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்விற்கு பொதுவான கற்பித்தல் யுக்திகள் சார்ந்து 12 வினாக்களும் தொழிற் திறன்கள் சார்ந்து 10 வினாக்களும் இடம் பெற்றன. இத்தேர்வில் 3,450 இடைநிலை ஆசிரியர்கள், 3,345 பட்டதாரி ஆசிரியர்கள், 1,073 முதுகலை ஆசிரியர்கள் ஆக மொத்தம் 7,868 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேலும், தொழில்நுட்ப இடர்பாடுகள் காரணமாக தேர்வு எழுதாதவர்களுக்கு மீளவும் கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி இணையவழி தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தேர்வில் 2,437 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆக மொத்தம் 10,305 ஆசிரியர்கள் மேற்காண் இணையவழி MCQ தேர்வினை எழுதினர். இவர்களிலிருந்து 2,008 ஆசிரியர்கள் அடுத்தக்கட்ட தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தேர்வில் கற்பித்தலின் நோக்கம், கற்பித்தலின் நவீன புதுமையான உத்திகள், கற்பித்தலுக்கு திட்டமிடல், மதிப்பீட்டு முறை, குறைதீர் கற்பித்தல் ஆகியனவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் 2ம் கட்ட தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் பாடப் பொருள் சார்ந்து 20 வினாக்களும், கற்பித்தல் நுட்பம் சார்ந்து 8 வினாக்களும் கேட்கப்பட்டன.
குறிப்பாக கடந்த 2023 ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி அன்று நடைபெற்ற இத்தேர்வில் 571 இடைநிலை ஆசிரியர்கள், 743 பட்டதாரி ஆசிரியர்கள், 222 முதுகலை ஆசிரியர்கள் ஆகமொத்தம் 1,536 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களிலிருந்து 992 ஆசிரியர்கள் மூன்றாம் கட்ட தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 21 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக மூன்றாம் கட்டத் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வில் ஆசிரியர்களுடைய பேச்சாற்றல், பாடப்பொருள் சார்ந்த அறிவினை வெளிப்படுத்தும் திறன், கற்பித்தல் நுட்பங்கள், வகுப்பறை மேலாண்மை, தெளிவாக எடுத்துரைக்கும் திறன், தகவல் தொடர்பு ஆளுமை ஆகியன நேரடியாக உற்று நோக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.
இத்தேர்வில் 355 இடைநிலை ஆசிரியர்கள், 482 பட்டதாரி ஆசிரியர்கள், 127 முதுகலை ஆசிரியர்கள் ஆக மொத்தம் 964 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். இவர்களிலிருந்து குறைந்தபட்சம் 75 சதவிகித மதிப்பெண் பெற்ற 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுகலை ஆசிரியர்கள் ஆக மொத்தம் 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
கனவு ஆசிரியர் தேர்வு முடிவுகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியிட்டார். கனவு ஆசிரியர் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும், தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதல் முறையாக கனவு ஆசிரியர் விருது மூலம் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள், கல்வி, கலை, தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகிய பன்முக கூறுகளில் சிறந்து விளங்கும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்காக தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சார்ந்த 54 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு தமிழக அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 7 நாள் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு நேற்று (அக்.28) இரவு சென்னை விமான நிலையத்திற்கு திரும்பினர்.
குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முதலாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களை வெளிநாட்டில் உள்ள கலாச்சாரம் தொழில்நுட்ப வளர்ச்சி கல்வி சார்ந்த அறிவினை தெரிந்து கொள்வதற்காகவும் அவற்றை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு தமிழகத்திற்கு வந்து பள்ளி மாணவர்களுக்கு அதனை கற்பிக்கும் நோக்கத்தில் இந்தச் சுற்றுலா அமைந்ததாகவும், ஆசிரிய பெருமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு அரசு பள்ளிகளின் இயக்குனர் நரேன், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமானம் மாற்றமாக சென்னை திரும்பினார்.