திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தினமும் சுமார் 1200 முதல் 1500 பேர் வரை சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு அவசர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் 24 மணி நேர அவசர சிகிச்சை, குழந்தைகள் நலப்பிரிவு, கர்ப்பிணிகள் நல பிரிவு, டயாலிசிஸ் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வரும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த வடுகபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கலா என்ற பெண் வயிற்று வலி ஏற்பட்டு கடந்த 20-ம் தேதி மணப்பாறையில் உள்ள காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்து மருத்துவர் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும் மாறு கூறி உள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்து வந்தது. ஆனால் அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணின் இரத்தத்தின் அளவு 4 (எச்பி) புள்ளி மட்டுமே இருந்துள்ளது. சராசரியாக 10 க்கு மேல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உணர்ந்த மருத்துவக்குழுவினர் இதுதொடர்பாக குடும்பத்தினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையடுத்து அந்த பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய தொடர் சிகிச்சை முறைகளை தொடர்ந்தனர். மேலும் இரத்ததின் அளவை அதிகரிக்க 3 யூனிட் இரத்தமும் அந்த பெண்ணிற்கு செலுத்தப்பட்டு உடல் நிலையை மேம்படுத்துவதற்கான அனைத்து சிகிச்சை முறைகளும் சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு மீண்டும் இரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்ட போது 11 புள்ளிகளை கடந்ததுடன் உடலும் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு தேறி வந்ததை மருத்துவர்கள் அறிந்தனர்.
இந்த சூழலில் நேற்று (அக்.05) அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிட மருத்துவக்குழுவினர் முடிவு செய்து, அதன்படி மணப்பாறை காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் தமிழ்மணி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் மஜிதா, விஜயா, மயக்கவியல் மருத்துவ நிபுணர் மலைத்துரை, அறுவை சிகிச்சை அரங்க செவிலியர்கள் அம்சவள்ளி, ராஜலெட்சுமி, ஜோன் ஆப்ஆர்க் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை தொடங்கினர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் பெண்ணின் வயிற்றில் இருந்த பிரமாண்ட அளவிலான 5 கிலோ கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்குப்பின் உள்ள மருத்துவ கண்காணிப்பு அறைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். குறைந்த அளவு உடலில் இரத்தம் இருந்ததோடு 5 கிலோ எடையுள்ள கட்டி வயிற்றில் இருந்ததால் கடும் அவதிக்கு ஆளாகி வந்த வந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவில் எந்தவித செலவுமின்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அசத்தி உள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.
இதுகுறித்து கலாவின் மகன் விஜய் கூறுகையில், “பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும் என கூறினர். கடைசியாக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அங்கிருந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் மருத்துவர்களின் சிகிச்சை அளித்த விதம் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு இன்று காலை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக ஐந்து கிலோ கட்டியை அகற்றி உள்ளனர். தற்போது எனது தாயார் நலமுடன் இருக்கிறார்” என்றார். ஏற்கனவே இதுபோன்ற அறுவை சிகிச்சை மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டாலும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனித்துவம் பெற்று வருகின்றது. இது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.