மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு, அண்ணாநகர், கிண்டி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, வேளச்சேரி, பெரம்பூர், எழும்பூர், மாதவரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
இதையடுத்து சென்னையின் பிரதான சாலைகளில் தேங்கிய தண்ணீர் உடனே அகற்றப்பட்டது. குறிப்பாக சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டதால் இன்று காலை பொதுமக்கள் சிரமம் இன்றி தங்களது பணிகளை தொடர்ந்தனர்.
மேலும் அரசு மேற்கொண்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. இரவு கொட்டிய மழைக்கு சாலையில் தண்ணீர் தேங்கி இருக்கும் என நினைத்து வீட்டைவிட்டு வெளியே வந்தவர்களுக்கு ஆச்சரியம் தான் இருந்திருக்கும். காரணம் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
வழக்கம்போல் சாலை பளிச்சென்று இருந்ததை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்த சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு, கனமழை பெய்தாலும் சாலையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.