சென்னை, கிண்டி கிங் நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்திற்கு, இந்திய பசுமைக் கட்டட கவுன்சிலின் தலைவர் அஜித் குமார் ஜோர்டியா அவர்கள், இன்று (24.09.2024) சென்னை தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை சந்தித்து, தங்க தரச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கான அறிவிப்பினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.06.2021 அன்று வெளியிட்டார். இக்கட்டடம், பொதுப்பணித்துறையால் 6,03,409 சதுர அடி பரப்பளவில் ரூ.240.54 கோடி மதிப்பீட்டில், மருத்துவமனை கட்டடமானது 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவின் முதற்கட்டடமாக 15.06.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இக்கட்டட பணியானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திட்டமிடப்பட்டதற்கு 4 மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டு, கட்டட துறையில் சிறந்த மைல்கல்லாய் அமைந்துள்ளது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட ஓர் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான நோயாளிகள் குணமடைந்ததற்கான சிறப்பான மருத்துவ பணிகளை செய்து தற்பொழுது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இம்மருத்துவமனையில் தங்கி பயன்பெறும் நோயாளர்கள் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தன்னியல்பாக குணமடைய உயிரியக்க வடிவமைப்பு கருத்தியல் (Biophilic Design) அடிப்படையிலும் மற்றும் பசுமைக் கட்டடமாகவும் கீழ்கண்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு பசுமைத் தரத்சான்றிதழ் பெறும் வண்ணம் இந்திய பசுமை கட்டட கவுன்சிலில் 20.03.2023 அன்று பதிவு செய்யப்பட்டது.
இம்மருத்துவமனை கட்டடம் பசுமைக் கட்டடமாக கட்டுமானத்தின்போது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் பசுமைத் தரச்சான்றிதழ் பெற்ற கட்டுமான பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள், நீர் சிக்கனத்தினை மேம்படுத்தும் வண்ணம் குழாய்கள் மற்றும் மறுசுழற்சி செய்யபட்ட நீரினை பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின் சேமிப்பினை கூட்டும் வண்ணம் மின் உபகரணங்கள், திடக்கழிவு மேலாண்மை (Vermicompost), மக்கள் இயற்கையோடு ஒன்றிணையும் வண்ணம் கட்டடத்தினுள் பூஞ்செடிகளுடன் கூடிய தாழ்வாரங்கள், வெளிப்புறங்களில் பச்சை புல்வெளிகளும், செயற்கை நீரூற்றுகளும் மற்றும் நோய் தன்மைக்கேற்ப மருத்துவ நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட சுவர் வண்ணங்கள் பூசப்பட்டும், பெரிய சாளரங்களும், முற்றங்களும் கொண்டு உலக தரத்தில் இக்கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் உற்பத்தியாகும் அனைத்து வகையான கழிவுகளையும் சுத்திகரிக்கும் வண்ணம் 500 KLD வசதியுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) மற்றும் 30 KLD வசதியுள்ள மருத்துவ திரவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் (ETP) அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பசுமைக் கட்டடமாக வடிவமைக்கப்பட்டு பொதுப்பணித்துறையால் உருவாக்கப்பட்ட முதல் கட்டடம் இதுவே ஆகும். இம்மருத்துவமனை கட்டடத்திற்கு இந்திய பசுமை கட்டட கவுன்சிலானது (IGBC – Healthcare Projects) தங்க தரச்சான்று வழங்கியுள்ளது. இச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை - இந்திய பசுமை கட்டட கவுன்சில் (சென்னை பிரிவு) தலைவர் அஜித் குமார் ஜோர்டியா அவர்கள், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் 24.09.2024 இன்று வழங்கினார்.