திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. பவள விழா ஆண்டு "முப்பெரும் விழா" நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தி.மு.க பவள விழா ஆண்டு, தி.மு.க முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டு தோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோர் பெயர்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கழகம் காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி நன்றியின் அடையாளத்தைக் காட்டும் செயலை தலைவர் கலைஞர் அவர்கள் 1985 ஆம் ஆண்டு முதல் துவக்கி வைத்தார்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் - பேரறிஞர் பெருந்தகை அண்ணா-தமிழினத் தலைவர் கலைஞர் பெயரிலான விருதுகள் கழகக் காப்பாளர்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2008 ஆம் ஆண்டு முதல் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதும், 2018 ஆம் ஆண்டு முதல் இனமானப் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து-இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் கழகத் தலைவர் மாண்புமிகு மு க ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது.
இந்த ஆண்டுக்கான 'மு.க.ஸ்டாலின் விருது' தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.