ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல இன்னல்கள் விளைவிக்கும் சட்டங்கள் இயற்றி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆதரவு தெரிவித்தது.
ஜெயலலிதா இருந்த காலத்தில் தமிழ்நாட்டுக்குள் நுழையாத நீட் தேர்வு, பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வந்தது. இந்த நீட் தேர்வால் அனிதா முதல் அண்மையில் உயிரிழந்த தனுஷ் வரை தமிழ்நாட்டில் மட்டும் பல பலிகளை வாங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த தேர்வு காரணமாக ஆண்டுதோறும் பல மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துகொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை வருவதற்கு எடப்பாடி பழனிசாமிதான் முக்கிய காரணமாக இருக்கிறார். எனினும் வெட்கமே இல்லாமல், அதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறை கூறுகிறார் பழனிசாமி. பழனிச்சாமியின் பேச்சுக்கு பலரும் கண்டனமும் பதிலடியும் கொடுத்து வரும் நிலையில், தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
"நீட் தேர்வு தோல்வியால் தஞ்சாவூரில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் சவடால் விட்டிருக்கிறார். ’’உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை முதல்வர் உணரவேண்டும்’’ என சொல்லியிருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டு 13 அப்பாவிகளை துள்ளத் துடிக்க கொன்று ரத்தகறை படிந்த கைகளில்தான் இந்த ட்விட்டை போட்டிருக்கிறார் பழனிசாமி. ‘’நீட் தேர்வினால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தவறான பொய்யை மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்’’ என ஆட்சியில் இருந்த போது சொன்னவர்தான் பழனிசாமி.
அப்படி பழனிசாமி பேசியே அனிதா (2017), பிரதீபா (2018), சுபஸ்ரீ (2018), ஏஞ்சலின் (2018), வைசியஸ்ரீ (2019), ரிதுஸ்ரீ (2019), மோனிஷா (2019), கீர்த்தனா (2019), ஹரிஷ்மா (2020), ஜோதி ஸ்ரீதுர்கா (2020), ஆதித்யா (2020), மோதிலால் (2020), விக்னேஷ் (2020), சுபஸ்ரீ (2020) என 14 மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாகி, ரத்தக் கறையை உடல் முழுவதும் பூசிக் கொண்டவர்தான் பழனிசாமி.
’’நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே. இப்போது நீட் எதிர்ப்பு போராளி போர்வை போர்த்தி கொண்டு வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.
ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்துவிட்டு, இன்று மாற்றி பேசி வாயை வாடகைக்கு விட்டிருக்கிறாரா பழனிசாமி? ’’எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்?’’ என இப்போது சொல்லும் பழனிசாமி, எத்தனை மாணவர்களின் சாவுக்கு காரணமாக இருந்தார்? என்பதை உணர வேண்டும்.
மருத்துவத் துறையை கவனித்து வந்த இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வர 2019-ல் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது மோடி அரசு. இந்த தேசிய மருத்துவ ஆணையம் மூலம்தான் நீட் தகுதி தேர்வும், மருத்துவ மேல் படிப்பிற்கான நெக்ஸ்ட் தேர்வும் நடத்தப்படும். இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேறியது.
அதன்பிறகு மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது, அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன், ‘’இந்த மசோதா நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு பலம் சேர்ப்பதால் ஆதரிக்க முடியாது’’ என்று சொன்னார். மசோதவை எதிர்த்த அதிமுக என்ன செய்திருக்க வேண்டும்? மசோதவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும் அல்லவா! ஆனால், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
அதாவது மசோதா நிறைவேற மறைமுகமாக அதிமுக ஆதரவு அளித்தது. அன்றைக்கு தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள அப்படியோரு நாடகத்தை நடத்தினார்கள். இப்படிதான் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும் அதை மாநிலங்களவையில் எதிர்த்த அதிமுக, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் முத்தலாக் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
’’தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது’’ என்று சொல்லி மசோதாவை இரண்டு அவையிலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. ஆனால், வாக்களிக்காத தீர்மானம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக நீட் தேர்வை பற்றி எல்லாம் பேசாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளுமாறு பாதம்தாங்கி பழனிசாமியை வலியுறுத்துகிறோம்."