தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் - 29 நபர்கள், பேரூராட்சிகள் இயக்குநரகம் - 18 நபர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகார் வாரியம் - 97 நபர்கள் என மொத்தம் 144 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் இந்த பணி நியமன ஆணைகளில் தூய்மைப் பணியாளர் மகள் துர்கா பெற்றுள்ளார். இதையடுத்து இந்த பணியை தொடர்ந்து தனது தலைமுறையினரின் வாழ்க்கை மாறப்போவதாக அவர் நெகிழ்ச்சி பேட்டியளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துர்கா. இவர் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்கவுள்ளார். இதற்கான பணி நியமன ஆணையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனிடையே பேட்டியளித்த அவர் பேசியதாவது :-
அரசு கொடுக்கும் சலுகைகளை முறையாக பயன்படுத்தி படித்தாலே, நாம் நல்ல நிலைமைக்கு வரலாம். நான் அரசுப் பள்ளி, கல்லூரியில் தான் படித்தேன். TNPSC தேர்வுக்காகவும் அரசு சார்ந்த தளங்களிலும், அரசின் பயிற்சி மையத்தின் உதவியாலும்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். முதலமைச்சர் கையால் பணி நியமன ஆணையை பெறுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை எனது தந்தையும் கண்டிருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அவர் கடந்த 7 மாதங்களுக்கு அவர் தவறிவிட்டார். என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள்தான். ஆனால் இன்றிலிருந்து என்னால் எனது தலைமுறையினரின் வாழ்க்கை மாறப்போகிறது." என்று நெகிழ்ச்சியாக பேட்டியளித்துள்ளார்.
இதையடுத்து இவரது பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் துர்கா அவர்களே எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன்… கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து!" என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.