தமிழ்நாடு

”இயற்கைப் பேரிடரில் அரசியல் பார்வை தேவையற்றது” : ஒன்றிய அரசுக்கு கி.வீரமணி அறிவுறுத்தல்!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

”இயற்கைப் பேரிடரில் அரசியல் பார்வை தேவையற்றது” : ஒன்றிய அரசுக்கு கி.வீரமணி அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவை தேசியப் பேரிடராக அறிவித்துத் தாராள உதவிக் கரத்தை ஒன்றிய அரசு நீட்ட வேண்டும். இயற்கைப் பேரிடரில் கூட அரசியல் பார்வை தேவையற்றது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

கேரளத்தின் வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட மனித பலி என்ற கொடூரம் இதுவரை கணக்கிட்டபடி 408 பேர்களாக உயர்ந்துள்ள செய்தி, மனித இதயம் உள்ள எவரது நெஞ்சத்தையும் பிழிவதாகும்!

இன்னும் தேடும்பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது; பாதிக்கப்பட்டோர், மீட்கப்பட்டவர்கள் கூறும் நிகழ்வுகள் இரத்தக் கண்ணீர் ஓடும் துன்பவியல் சோகப்படலமாக உள்ளது! அடர்ந்த காடுகள் உள்ள பகுதியில் இன்னமும் மனித உடல்களைத் தேடும் பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது!

‘உடுக்கை இழந்தவன் கைபோல்’’ தி.மு.க. அரசு செய்த உதவி

தி.மு.க. அரசு, ‘‘உடுக்கை இழந்தவன் கைபோல்’’ உடனே முன்வந்து கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு, 5 கோடி ரூபாய் நிதி உதவியை நமது திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் மூலம் காசோலை அனுப்பி, அம்மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு ஆற்றுப்படுத்தினார்.

அப்பகுதியில் எம்.பி.யாக இருந்தவரும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்களும், மற்ற அனைத்து தலைவர்களும் கேரள அரசுக்கும், அம்மாநில மக்கள் அடைந்த துன்ப துயரங்களுக்கும் ஆறுதல் கூறினர்; ஒத்தறிவு உணர்வை (Empathy) வெளிப்படுத்தி ஆற்றுப்படுத்தி வருகின்றனர்!

தேசிய பேரிடர் என்று அறிவிக்கப்பட வேண்டும்

தேசிய பேரிடர் (National Distress) என்று இதை உடனடியாக பிரகடனப்படுத்தி, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, பாதிக்கப்பட்ட மக்கள், இழப்புகளை சந்தித்து – அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருடன் உள்ளவர்களது மறுவாழ்வுக்கு உதவிட வேண்டியது ஒன்றிய அரசின் மனிதநேய – மகத்தானதொரு கடமையாகும்!

இராணுவத்தின் தொண்டும், அதிவேக நிவாரணப் பணிகளும், தொடர்பற்ற இடங்களுக்குப் பாலம் அமைத்தது உள்பட மிகவும் சிறப்பானவையாகும். பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

என்றாலும் இனியும் தாமதிக்காமல் தேசிய பேரிடர் என்று அறிவித்து – தாராளமாக நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வாரி வழங்கிடுவது அவசரம் – அவசியம்!

அரசியல் கண்ணோட்டம் கூடாது!

இதில் அரசியல் கண்ணோட்டம் தேவையே இல்லை; மனிதாபிமானமும், மனசாட்சி கொல்லப்படாது அதிவிரைவு செயற்பாடுகள் மூலமும் தான் நிலைகுலைந்து திடீர் அனாதைகளாக்கப்பட்ட அம்மக்களுக்கு மிகப் பெரிய ஆறுதலளித்துப் புது வாழ்வைத் தரக் கூடும்.

எதிர்க்கட்சித் தலைவர், பல கட்சித் தலைவர்கள் விடுக்கும் வேண்டுகோளை ஒன்றிய அரசும், அதன் பிரதமர் மோடி அவர்களும் அலட்சியப்படுத்தக் கூடாது!

தேசிய பேரிடர் என்பதில் உள்ள தேசியம் என்பதன் பொருள் என்ன?

நடைபெறுவது மக்களாட்சி; அது மக்களுக்காக, மக்களின் நலனுக்காக நடைபெறும் அரசமைப்புச் சட்டப்படி உள்ள ஜனநாயகக் குடியரசாகும்.

எனவே திடீர் இயற்கைச் சீற்றங்களில் மக்களைக் காப்பாற்றிட, மீண்டும் இப்படிப்பட்ட அவலங்கள் நடைபெறாத வண்ணம், தொலைநோக்குத் திட்டங்கள், உடனடி நிவாரணம் என்ற பல கோணங்களில் அம்மாநில அரசு சற்றும் தாமதிக்காமல், உதவிட முன்வர வேண்டும்.

தேசிய ஒருமைப்பாட்டின் உண்மையான தத்துவத்தின் உட்பொருள் என்ன? தேசிய பேரிடர் என்ற பெயரில் ‘தேசியம்’ என்ற சொல் இடம் பெற்றதன் அடி நீரோட்டம் என்ன?

பாரபட்சக் கண்ணோட்டமின்றி, பாதிப்பை மட்டுமே கணக்கிலெடுத்து அரசியல் உணர்வுகளை ஒதுக்கி, பொது நிலையோடு நாம் நம்முடைய மக்களுக்குத்தான் உதவுகிறோம் என்ற வானம் போல் விரிந்த மனப்பாங்குடன் ஒன்றிய அரசு விரைந்தோடி ஆறுதல் கூறுவதுடன், மீட்புப் பணிகள் – தடுப்புப்பணிகள் முதலியவற்றினை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க ‘உதவாதினி தாமதம் உடனே வந்து உதவுக‘ என்ற அம்மக்களின், அம்மாநில அரசு விடுக்கின்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் ஒன்றுபட்ட உறுதிமிக்க வேண்டுகோளை உடனே நிறைவேற்ற, மனிதம் காக்கப்பட மக்கள் சேவைதான் இப்போதைய உடனடி தேவை என ஒன்றிய அரசு விரைந்து செய்க.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories