முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது 100வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வகையில் தென் தமிழ்நாட்டின் அறிவுசார் கலங்கரை விளக்கமாக சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நூலகம், நூல்கள் மட்டுமன்றி அனைத்து வகையான தகவல் வளங்களையும் உள்ளடக்கிய இடமாகவும், கலை, பண்பாடு, அறிவியல், மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து கற்றலுக்குமான மையமாகவும் அமைந்துள்ளது. ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக கட்டப்பட்டுள்ள இந்நூலகத்தில் சுமார் 3 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த நூலகம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த நூலகத்துக்கு 10 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் பத்து இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது!
‘அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம் போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும் நூலகங்கள் அமையவுள்ளன. அறிவுத்தாகம் கொண்டோரது தாகத்தைத் தணித்து, தமிழ்நாட்டில் வாழ்வோரது சிந்தனையையும் வாழ்வையும் இத்தகைய நூலகங்கள் வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம்" என்று கூறப்பட்டுள்ளது.








