விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) சிவசண்முகம் அவர்களை ஆதரித்து திருவாமாத்தூர் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கூடியிருந்த மக்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்கள் 40க்கு 40 தொகுதிகளை இந்தியா கூட்டணிக்கு பரிசளித்துள்ளீர்கள். தமிழ் மண்ணில் அடிமை அதிமுக கூட்டத்திற்கும், பாசிச பாஜக கூட்டத்திற்கும் என்றைக்கு இடமில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பாஜகவோடு இன்று பா.ம.க கூட்டணி வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் எப்படியாவது காலுன்ற வேண்டும், 5 இடமாவது ஜெயிக்கலாம் என்ற பேராசையில் 7 முறை பிரச்சாரம் மேற்கொண்டார் மோடி. கன்னியாக்குமரியில் தவம் செய்தும் பார்த்தார். ஆயிரம் முறை மோடி வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சொன்னேன். அதனை நிரூபிக்கும் வகையில் நாம் 100% வெற்றியை பெற்றுள்ளோம்
நீட் தேர்வை கொண்டுவந்த தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க-வுக்கு இந்த இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் தோல்வியைத் தான் கொடுப்பார்கள் என்ற அச்சத்தில் தேர்தலில் இருந்து அதிமுக விலகியுள்ளது. திமுகவைக் கண்டு அஞ்சிய அதிமுக, இப்போது தமிழ்நாட்டு மக்களை கண்டும் அஞ்சுகிறது.
நாட்டிலேயே நீட் தேர்வை முதலில் எதிர்த்தது திமுகதான். 7 வருடங்களுக்கு முன்பே போராட்டத்தை தொடங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். ஆனால், இப்போதுதான் நீட் தேர்வு குளறுபடிகளை இந்தியா முழுவதும் புரிந்துக்கொண்டு வருகிறார்கள். வட மாநில தலைவர்களும், மக்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.” என்று கூறினார்.