
கரூரில், பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் போலி ஆவணம் மூலம் மோசடியாக 4 பேர்கள் மீது பத்திர பதிவு செய்து கொண்டனர் என்று கரூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அதன்பேரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு கடந்த 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின் போது உடனிருக்க வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு ஜூலை 1 மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 6) நடைபெற்ற நிலையில், அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலையில் இருந்தே சென்னையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த கடந்த 5-ம் தேதி கரூரில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் இன்று காலை முதலே சென்னையில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது வீடு, உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு என பல இடங்களில் . 2 டி.எஸ்.பி.,க்கள், 9 ஆய்வாளர்களைக் கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
தொடர்ந்து நடைபெறும் சோதனையில் மேலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரையும் போலீசார் தேடி வருகின்றனர்.








