தமிழ்நாடு

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் : மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கையில் 13 அறிவிப்புகள்!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கையில் 13 அறிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் : மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கையில் 13 அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

1.ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 'முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்' செயல்படுத்தப்படும்.

2. உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாநில விருது இனி ஹெலன் கெல்லர் விருது என அழைப்பபடும்.

3. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவி தொகை ரூ.2000, 40%த்திற்கு மேல் பாதிப்படைந்த புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய 5081 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் கூடுதலாக ரூ.12.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.

4. செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக செயல்படும் 10 அரசு சிறப்பு பள்ளிகளில் பாடத்திட்டம் முழுவதையும் சைகை மொழியில் தயாரித்து எதிர்வினை குறியீடு (QR Code) மூலம் அறிந்துகொள்ளும் வகையில் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக முதல் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

5.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உணவூட்டு மானிய உதவித்தொகை ரூ.1,200 லிருந்து ரூ.1,400 ஆக உயர்த்தி 12,853 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.279.96 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.

6.பார்வைத் திறன் குறைபாடுடைய அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கற்பிக்கும் கருவிகள் மற்றும் தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் அடங்கிய பெட்டி ரூ.5000 முதல் ரூ.10000 மதிப்பில் 430 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.34.50 செலவில் வழங்கப்படும்.

7. அரசு சிறப்புப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையங்களில் தங்கி பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைக்கான மானியத் தொகை ரூ.500 முதல் ரூ.600க்கு உயர்த்தப்பட்டு 1154 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.11.66 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

8.அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

9.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி அரசு பணியார்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படும்.

10.பழுதடைந்த வாகனங்களுக்கு பதிலாக புதிய இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

11. பழுதடைந்த காதொலிக்கருவிகளுக்கு பதிலாக புதிய காதொலிக்கருவிகள் வழங்கப்படும்.

12. பழுதடைந்த பிரெயில் கைக்கடிகாரங்களுக்கு பதிலாக புதிய பிரெயில் கைக்கடிகாரங்கள் வழங்கப்படும்.

13. அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்படும்.

banner

Related Stories

Related Stories