சிறுவர்களுக்கு பிடிக்கும் என்று ஒரு உணவு வகையை பல வடிவங்களில் செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதில் Smoking Biscuits என்ற பிஸ்கட்டும் சிறுவர்களுக்கு பிடித்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பிஸ்கட்டை சாப்பிடும்போது வாயில் இருந்து புகையாக வரும். இந்த புகையானது திரவ நைட்ரஜன் (Liquid nitrogen) என்னும் கெமிக்கல் மூலம் உருவாக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு இது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதால், இதனை சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த சூழலில் இந்த பிஸ்கட்டை சாப்பிட்ட சிறுவன் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தேவனகிரி என்ற பகுதியில் “Robotic Birds Exhibition” கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்த பிஸ்கட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அப்போது அங்கே குடும்பத்துடன் வந்திருந்த சிறுவன் ஒருவர், இந்த பிஸ்கட்டை வாங்கி முழுமையாக ஒரே நேரத்தில் சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிடும்போது அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து புகை கிளம்ப, சட்டென்று சிறுவனுக்கு உடலுக்குள் எரிச்சல் உணர்வு ஏற்பட்டு அழுதுள்ளார்.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுவன் நலமுடன் இருக்கிறார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்திய நிலையில், பலரும் இந்த பிஸ்கட்டை சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறுகையில், “சமூக வலைதளங்களில் 2 தினங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவர் ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொண்டு அதன் புகையை தாங்க முடியாமல் கூச்சலிடும் வீடியோ, ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த Smoking Biscuits உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. Liquid Nitrogen மூலம் தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் உயிருக்கு ஆபத்தானவை.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு இடங்களில் இந்த biscuits வாங்கி கொடுக்க வேண்டாம். சென்னையில் ஸ்மோக்கிங் பிஸ்கட் தயார் செய்யும் இடங்களில் ஆய்வு செய்து இதன் பாதிப்பை குறித்து விளக்கி சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. Liquid Nitrogen தேவைப்படும் இடத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும். உத்தரவை மீறி பயன்படுத்தினால் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.