இந்தியா கூட்டணி சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து, சின்னமனூர் தேரடி பகுதி அருகே கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அவர்கள், மக்கள் மத்தியில் வாக்குகளை சேகரிக்கும் வகையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சரவணன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், கழகத் தீர்மான குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சின்னமனூர் நகராட்சி தலைவர் அய்யம்மாள் ராமு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கனிமொழி பேசியதாவது, “நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலை இல்ல திண்டாட்டம் இருந்து வருகிறது. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஆட்சி அமைத்தார் மோடி. ஆனால் இதுவரை இரண்டு பேருக்கு கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை.
சட்டபூர்வமாக ஊழல் செய்யலாம், என்று தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாஜக ஊழல் செய்துள்ளது. இந்தியாவில் முழுவதும் உள்ள கட்சிகளின் தேர்தல் பத்திரம் நிதியை ஒருபுறமும் பாஜகவின் தேர்தல் பத்திர நிதியை மறுபுறமும் வைத்தால், முக்கால்வாசி நிதி பாஜகவிடம் தான் இருக்கும்.
ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு பாஜக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை ஏவி சோதனை செய்கிறது என்றால், அந்த நிறுவனம் அதை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்; இல்லை என்றால் அந்த நிறுவனம் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால், அந்த நிறுவனத்தின் மீதான வழக்குகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படும்.
உலகிலேயே இந்தியாவில் உள்ள ஜிஎஸ்டி வரியின் குழப்பம் எந்த நாட்டிலும் இல்லை. ஜிஎஸ்டி வரி படிவத்தில் சிறு தவறு இருந்தால் அதற்கு அவர்கள் விதிக்கும் அபராதம், கட்டுவதற்கு பதிலாக நாம் தொழிலையே மூடிவிட்டு செல்லலாம் அந்த அளவிற்கு இருக்கிறது.
புல்வாமா தாக்குதல் 40 வீர்ரகளின் உயிர் பறிபோனது பாஜகவின் அரசியல் காரணமாக நடைபெற்றது, என் உயிரை இந்தியாவிற்காக தியாகம் செய்கிறேன் என்று நினைத்து இராணுவத்தில் சேர்ந்த வீரர்களின் உயிரை அரசியலுக்காக பறித்துள்ளது பாஜக. இந்த தேர்தல் என்பது இரண்டாவது சுதந்திர போராட்டம், நாம் நாட்டை பாதுகாக்க, நம் வீட்டை நம் வீட்டுப் பெண்களை, நம் மக்களை பாதுகாக்க இந்த ஆட்சியை நாம் விரட்ட வேண்டும். பாஜகவில் உள்ள 44 எம்பிகள் மீது பாலியல் குற்ற வழக்குகள் உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் ஆயிரம் 1.15 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் என கூறியுள்ளது. நாம் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் ஆயிரம் ரூபாய் உடன் கூடுதலாக இந்த திட்டம் வரவுள்ளது.” என்றார்.