
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.65 கோடி மதிப்பில் புதிய நரம்பியல் பிரிவு கட்டிடத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் ரூ.12.65 கோடி செலவில் கட்டப்பட்ட பயிற்சி பள்ளி, 6 பயிற்சி ஆய்வகங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய 40 விடுதி அறைகள், அதிநவீன ஒலி ஒளி சாதனங்களுடன் கூடிய கலந்தாய்வு கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மருத்துவத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். குறிப்பாக தென் மாவட்டத்தில் கனமழை பெய்த போது ஏரலில் உள்ள அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத நேரத்தில் பிரசவம் பார்க்க வந்த பெண்மணிக்கு உடனடியாக மருத்துவம் பார்த்த செவிலியர் ஜெயலட்சுமி மற்றும் மருத்துவப் பணியாளர் பிராட்டியம்மாளுக்கு உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் மா சுப்பிரமணியன் கௌரவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “1021 மருத்துவ பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது. 20 மாவட்டங்களில் சுகாதார பணியில் சேரும் முகாம் நடைபெற்றது. 1021 பேரில் 20-ல் இருந்து 30 பேர் கர்ப்பமுற்ற தாய்மார்கள் ஆகவும் பிரசவித்த தாய்மார்கள் ஆகவும் உள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், அரசு பணியாளர்களுக்கான பிரசவகால விடுப்பை ஒன்பது மாதத்தில் இருந்து 12 மாதங்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தியுள்ளார். பிரசவ விடுப்பு நடைமுறையில் உள்ளது. இருந்தபோதிலும் 20-ல் இருந்து 30 பேர் முதலில் பணியில் சேர்ந்து விட வேண்டும். அவர்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
அவர்கள் எந்த இடத்தை தேர்வு செய்தார்களோ சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பணியில் அவர்கள் சேர்ந்து விட வேண்டும். பிறகு அவர்களுக்கு எவ்வளவு நாள் விடுப்பு தேவைப்படுகிறது என்பதனை எழுத்துப்பூர்வமாக எழுதி தந்தால் அரசின் விதிமுறைப்படி அவர்களுக்கு விடுமுறை கொடுக்கப்படும்.
பஞ்சு மிட்டாய் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து வருகிறது. சுற்றுலா மையங்களில் பஞ்சுமிட்டாய்கள் விற்கப்படுகிறதா என்பதை பார்க்க சொல்லி உள்ளோம். உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அந்த பஞ்சுமிட்டாய்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்த பிறகு, அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.








