தமிழ்நாடு

”இடஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் பாஜக” : திமுக மாணவர் அணி கடும் கண்டனம்!

இடஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் யு.ஜி.சி.க்கு தி.மு.க மாணவர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

”இடஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் பாஜக” :  திமுக மாணவர் அணி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று கோவை பீளமேடு, காளப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தலைவர் இரா.ராஜீவ்காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், இடஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் யு.ஜி.சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: -

இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, கல்வி ஒரு சாதிக்கு மட்டும் இருந்த நிலையை மாற்றி எல்லோருக்கும் கல்வி வேண்டுமென 16-09-1921 அன்று நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டு, இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. 1928ஆம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் நிரந்தரமாக்கப்பட்டது. இதனால், அரசியல் – கல்வி – வேலைவாய்ப்பு உரிமை அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்தது!

வகுப்புவாரி உரிமையை எதிர்த்து இடைஇடையே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வந்த போது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெரும் முயற்சியால் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் அதை வென்று காட்டி, அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்து எல்லோருக்கும் படிக்கிற உரிமையை மீட்டெடுத்துள்ளது.

வருணாசிரம அடிப்படையில், சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டதோ, அதே முறையில் அவர்களுக்கு வழங்க வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இடஒதுக்கீட்டு கொள்கை.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப்பெற வேண்டுமென்ற சமத்துவ நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டை சிதைப்பதற்காக உள்நோக்கத்துடன், திட்டமிட்டே இடஒதுக்கீட்டுப் பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி, உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி, ஒ.பி.சி. பிரிவில் காலியாக உள்ள இடங்களை பொது பிரிவினரை கொண்டு நிரப்ப நினைப்பது மீண்டும் இடஒதுக்கீட்டு கொள்கையை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான பாசிச பா.ஜ.க. அரசின் அடித்தளம்.

வருணாசிரம, சனாதனத்தை தூக்கிபிடிக்கும் பா.ஜ.க. பெரும் சதி திட்டத்தை செய்து, பல்கலைக் கழக மானியக் குழுவிக்கு இல்லாத அதிகாரத்தை அவர்கள் உருவாக்க நினைப்பது ஒரு சதி திட்டமாகும்.

”இடஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் பாஜக” :  திமுக மாணவர் அணி கடும் கண்டனம்!

கடந்த டிசம்பர் 28-ல் இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிட்டு, அதன் மீது ஜனவரி 28-க்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று சொல்லி அறிவிப்பு வெளியிட்டது யு.ஜி.சி. இடஒதுக்கீடு பற்றி முடிவெடுப்பதற்கு யு.ஜி.சி.-க்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஏன் இத்தனை நாள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கல்வித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவிக்க மறந்திருந்திருக்கிறார். மறந்திருந்தார் என்றுச் சொல்வதை விட, குட்டி விட்டு ஆழம் பார்க்கலாம் என்ற ஒரு பெரும் சதி திட்ட நோக்கத்திலேயே இதை நிறைவேற்றி விடலாம் என்று காத்திருந்தனர்.

ஒவ்வொரு முறையும் இந்தியாவில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான சதிகள் வருகிற போதும், அதை எதிர்த்து குரல் கொடுக்கின்ற மண்ணாக, போராடுகிற மண்ணாக தந்தை பெரியாரின் திராவிட இயக்க மண்ணாக தமிழ்நாடு விளங்குகிறது. அவர் வழியில், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இப்போதைய நமது கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இடஒதுக்கீட்டினை காத்து கொண்டிருக்கும் அரணாக விளங்குகிறார்கள்.

அந்தவகையில், இப்போதும் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு குரல் பா.ஜ.க.-வை எச்சரித்துள்ளது. அதை உணர்ந்த பா.ஜ.க. அப்படி அறிவிக்கவில்லை என்று பின்வாங்கியுள்ளது. பா.ஜ.க.வின் சதிதிட்டத்தை தமிழ்நாடு விழிப்புணர்வோடு உணர்ந்து கொண்டதற்கான காரணம் திராவிட இயக்கம் தந்த கல்வியே! அந்த விழிப்புணர்வு இந்தியா முழுமையும் பெற வேண்டுமென்ற கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இனியும் இதுபோன்ற இடஒதுக்கீட்டிற்கு எதிரான எந்த செயலையும் செய்ய பா.ஜ.க. அரசு முற்படக்கூடாது என தி.மு.க. மாணவர் அணி எச்சரிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டம் வழங்காத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைக்கிற யு.ஜி.சியின் தலைவராக விளங்கும் ஜெகதீஷ்குமார் அறிவித்த அறிவிப்பு மிகப்பெரிய கண்டனத்திற்குரியது. யு.ஜி.சியை எதிர்த்தும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான தனது சதிதிட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

banner

Related Stories

Related Stories