தமிழ்நாடு

“ ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தியவரே அம்பேத்கர்தான்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“ ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தியவரே அம்பேத்கர்தான்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று (26-01-2024) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'வெல்லும் சனநாயகம்' என்ற மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்பதற்கு இலக்கணமாகத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் அருமைச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க கூடியிருக்கிறீர்கள். அருமைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களை அவர் சட்டக்கல்லூரி மாணவராக - மாணவர் தி.மு.க.வில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும்! அப்போதே கல்லூரி மேடைகளிலும் - கழக மாணவரணி மேடைகளிலும் அவரின் பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும்!

நாள்தோறும் கொள்கை உரம் வலுப்பெறும் இளம் காளையாகத்தான் இன்றைக்கும் ஜனநாயகம் காக்க இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அன்றைக்குக் கழகத்துக்குள்ளே முழங்கினார். இன்றைக்கு கழகக் கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார். சகோதரர் திருமா அவர்கள், எப்போதும் - எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு உள்ளே இருப்பவர்! மன்னிக்கவும் நமக்குள்ளே இருப்பவர்! தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் தோளோடு தோளாக துணை நிற்பவர் சகோதரர் திருமா அவர்கள்.

“ ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தியவரே அம்பேத்கர்தான்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

நாங்கள் எப்போதும் தமிழினத்தின் வலிமைக்கு உரம் சேர்க்கும் அடிப்படையில்தான் இணைந்து இயங்குகிறோம். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவு அல்ல; அரசியல் உறவு அல்ல; கொள்கை உறவு! தந்தை பெரியாரையும் - புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராலாவது பிரிக்க முடியுமா? அதுபோலதான், திராவிட முன்னேற்றக் கழகமும் - விடுதலைச் சிறுத்தைகளும்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மண்ணில் மரத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்கவும் தலைவர் கலைஞர்தான் காரணம். தந்தை பெரியார் மண்ணில் சென்னை சட்டக் கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயர் வைத்ததும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியதும் தமிழினத் தலைவர் கலைஞர்தான்! புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம்தான், திராவிட முன்னேற்றக் கழகம்.

புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுகின்ற - பட்டியலின மக்களின் நலனைப் பாதுகாக்கிற அரசுதான், நமது திராவிட மாடல் அரசு! சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாக பட்டியலிட விரும்புகிறேன். அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, சமத்துவ நாளாக அறிவித்தோம்! சகோதரர் திருமாவளவன் அவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் அண்ணலின் சிலையை அமைத்து, நானே திறந்து வைத்தேன். அண்ணலின் படைப்புகளைச் செம்பதிப்புகளாக விரைவில் வெளியிட இருக்கிறோம்.

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் ஆணையத்தை புதுப்பித்து உயிரூட்டினோம். நடத்தப்படாமல் இருந்த விழிப்புணர்வு கூட்டங்களை ஆறு மாதத்துக்கு ஒருமுறை நடத்தினோம். திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் சிலையை சென்னையில் திறந்து வைத்தோம். அண்ணல் அம்பேத்கர் பெயரால் தொழில் முனைவோர் நிதியும், அயோத்திதாசர் பெயரால் வீடுகட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - தமிழினத் தலைவர் கலைஞரும் உருவாக்கிய திராவிட - தமிழின உணர்வின் வெளிப்பாடுகளாகத்தான் இதையெல்லாம் நிறைவேற்றிக் காட்டி வருகிறோம்.

“ ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தியவரே அம்பேத்கர்தான்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

சமூகநீதி - சமத்துவச் சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக சகோதரர் தொல். திருமாவளவன் இந்த ‘வெல்லும் ஜனநாயகம்‘ மாநாட்டை கூட்டியிருக்கிறார். "வெல்லும் ஜனநாயகம்" என்று சொன்னால் மட்டும் போதாது! நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும்! இதுக்கான கட்டளையை பிறப்பிக்கத்தான் இந்த மாநாட்டை கூட்டி, சர்வாதிகார பா.ஜ.க. அரசை தூக்கி எறிவோம்! ஜனநாயக அரசை நிறுவுவோம்! என்று சபதம் ஏற்று மிக முக்கியமான 33 தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றியிருக்கிறார் சகோதரர் திருமாவளவன் அவர்கள்! இந்த சபதமும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி!

இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது. ஒன்றியத்தில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுயாட்சி அரசையும் உருவாக்க வேண்டும். அதனால்தான், குடியரசு நாளான இன்றைக்கு இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மக்களாட்சி மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்றால், ஜனநாயகம் வென்றாக வேண்டும்! அப்போதுதான், கூட்டாட்சி மலரும்! கூட்டாட்சியை சுட்டிக்காட்ட நாம் பயன்படுத்தும் ‘ஒன்றிய அரசு‘ என்ற சொல்லை ‘Union of States’ என்று பயன்படுத்தியவரே புரட்சியாளர் அம்பேத்கர்தான்!

அரசியலமைப்புச் சட்டம் கொடுத்த அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார்... "யூனியன் அரசும், மாநில அரசும் தனித்தனி அதிகாரம் பெற்றவை! ஒன்று மற்றொன்றுடன் அடிபணியவில்லை; ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது" என்று சொன்னார். அதைத்தான் நாமும் சொல்கிறோம்! "மாகாணங்கள் தெள்ளத் தெளிவான சகலவித தேசிய இன அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. எனவே, அவற்றின் தேசியப் பண்பு முழுநிறைவாய் வளர்ந்து மலர சுதந்திர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்" என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.” என்றார்.

banner

Related Stories

Related Stories