தமிழ்நாடு

“வார்த்தையே வரல, அழுகையா ஆனந்தக் கண்ணீராகத்தான் வருது” : பெருமிதத்துடன் நன்றி கூறிய ஆயி அம்மாள்!

குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருதுபெற்ற மதுரை திருமதி ஆயி அம்மாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆனந்தக் கண்ணீர் சிந்தி பெருமிதத்துடன் கூறிய நன்றி !

“வார்த்தையே வரல, அழுகையா ஆனந்தக் கண்ணீராகத்தான் வருது” : பெருமிதத்துடன் நன்றி கூறிய ஆயி அம்மாள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை கிழக்கு ஒன்றியம். யா.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி உ.ஆயி அம்மாள் என்ற பூரணம் தான் படித்த யா.கொடிக்குளம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தும் பொருட்டு கட்டடங்கள் கட்டுவதற்காக 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை தனது மகள் ஜனனி என்பாரின் நினைவாகத் தானமாக வழங்கியுள்ளார். இதனைப் பாராட்டி திருமதி ஆயி அம்மாள் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் சிறப்பு விருதினை மாண்புமிகு முதலமைச்சர் இன்றைய குடியரசு நாள் விழாவில் வழங்கினார்கள்.

விருதுபெற்ற பின் ஆயி அம்மாள் கூறியபோது, “முதலமைச்சர் அவர்களிடம் இன்று விருதுபெற்ற நேரத்தில், நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. முதலமைச்சர் அவர்களின் கையாலேயே விருது வாங்கியிருப்பதை எண்ணும்போது, நன்றி சொல்ல நினைத்தபோது வார்த்தையே வரவில்லை. அழுகையாக, ஆனந்தக் கண்ணீராகத்தான் வருகிறது.

கல்வி வளர்ச்சிக்காக என்னுடைய மகளுடைய எண்ணம் நிறைவேறுவதற்காக நான் அளித்த நிலம் தொடர்பான செய்திகளும் விருதும் உலகளவில் இன்று பேசப்படுவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

“வார்த்தையே வரல, அழுகையா ஆனந்தக் கண்ணீராகத்தான் வருது” : பெருமிதத்துடன் நன்றி கூறிய ஆயி அம்மாள்!

நான் படித்த பள்ளிக்கு நிலம் வழங்கிய செய்தியை அறிந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தம்பி திரு.உதயநிதி பொங்கல் விழாவின்போது 17-1-2024 அன்று என்னுடைய வீடுதேடி வந்து என்னைப் பாராட்டியது அதிர்ச்சியாகவும் எனக்கு ஆனந்தமாகவும் இருந்தது.

இந்த நேரத்தில் என்னுடைய பெற்றோரை, என் கணவரை, என் மகளை நினைந்து ஆனந்தம் அடைகிறேன். எனக்கு விருது வழங்குவதற்கு முன்னதாக திருநெல்வேலியைச் சேர்ந்த இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு தம்பிக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்கள்.

கடந்த டிசம்பரில் 18, 19 ஆகிய நாட்களில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட துணிச்சலான செயலைப் பாராட்டி செல்வன் தே.டேனியல் செல்வசிங் அவர்களுக்கு வீரதீரச் செயலுக்கான விருதையும் முதலமைச்சர் வழங்கினார்கள். அந்தக் காட்சியும் எனக்கு ஆனந்தையும் பெருமிதத்தையும் அளித்தது. அதற்கும் முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய சந்தோசத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியபோது ஆயி அம்மாள் ஓர் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சியளித்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

banner

Related Stories

Related Stories