தமிழ்நாடு

சிறுவன் - தாத்தா - சமத்துவம் - தி.மு.க : இளைஞரணி மாநாட்டில் குட்டி கதை சொன்ன அமைச்சர் உதயநிதி!

சேலத்தில் தி.மு.க இளைஞரணியின் மாநாடு வெற்றி கரமாக நடந்து வருகிறது.

சிறுவன் - தாத்தா - சமத்துவம் - தி.மு.க :  இளைஞரணி மாநாட்டில் குட்டி கதை சொன்ன அமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடல் முன்பு மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. பின்னர் மாநாட்டுத் திடலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.

இதையடுத்து இம்மாநாட்டில் நீட் தேர்வு ரத்து முதல் மாநில சுயாட்சி வரை ஒன்றிய அரசைக் கண்டித்து 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு தலைப்புகளில் திருச்சி சிவா எம்.பி, ஆ.ராசா எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.எம்.அப்துல்லா எம்.பி, மருத்துவர் எழிலன் நாகநாதன் உள்ளிட்ட பலர் பேசினர். மேலும் கலைநிகழ்ச்சிகளும், கலைஞர் குறித்த வீடியோக்களும் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

பின்னர் கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் சமத்துவத்தை குறிப்பிடும் வகையில் சிறுவன், தாத்தா குறித்த ஒரு குட்டிக் கதை சொன்னார்.

அந்த கதை,

ஒரு ஊரில் சிறுவன் இருந்தான். அவனுக்கு ஓட்டப்பந்தயத்தில் ரொம்ப ஆர்வம். அவனோடு யாரும் ஓடி அவனை ஜெயிக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருப்பான். ஒரு தடவை ஊரில் ஓட்டப்பந்தயம் நடந்தது. ஒரு வயதான முதியவர் ஒருவர் அந்தப் போட்டியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மற்ற எல்லோரையும் விட அந்த சிறுவன் வேகமாக ஓடி வெற்றி பெற்றான். எல்லோரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

மீண்டும் ஒரு போட்டி நடந்தது. அவனைவிட சற்று வயது அதிகமுள்ள குழந்தைகள் கலந்துக் கொண்ட அந்தப் போட்டியிலும் இந்த சிறுவனே வேகமாக ஓடி முதல் பரிசைப் பெற்றான். மக்கள் மீண்டும் அந்த சிறுவனுக்காக கைத்தட்டினார்கள். அந்த முதியவர் மட்டும் அமைதியாக இருந்தார். அந்த முதியவரிடம் சென்று அந்த சிறுவன் கேட்டான், ஏன் நீங்கள் மட்டும் எனக்கு கைத்தட்ட மாட்டேங்குறீங்க என்று கேட்டான்.

சிறுவன் - தாத்தா - சமத்துவம் - தி.மு.க :  இளைஞரணி மாநாட்டில் குட்டி கதை சொன்ன அமைச்சர் உதயநிதி!

அதற்கு அந்த முதியவர், அந்த கிராமத்தில் இருந்த வேறு இரண்டு சிறுவர்களோடு உன்னால் ஓடி ஜெயிக்க முடியுமா என்று கேட்டார். அதில் ஒரு சிறுவன், சத்தான உணவில்லாமல் வாடும் ஏழைவீட்டுப் பையன். மற்றொரு சிறுவன், கண்ணொளி இல்லாத மாற்றுத்திறனாளி. இவர்கள் இரண்டு பேரையும் உன்னால் ஜெயிக்க முடியுமா என்று கேட்டார்.

இப்போது பாருங்கள் என்று சொல்லி வேகமாக ஓடி முதல் ஆளாக வெற்றிக் கோட்டைத் தொட்டான் அந்த சிறுவன். மற்ற இரண்டு சிறுவர்களும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். இதனைப் பார்த்த மக்கள் கூட்டம், வெற்றிபெற்ற அந்த சிறுவனுக்கு கைத்தட்டவே இல்லை. அந்த சிறுவன் தாத்தாவிடம் போய்க் கேட்டான். ஏன் யாரும் கைத்தட்டவில்லை?

அந்த தாத்தா சொன்னார், இப்போது மீண்டும் ஓடு. ஆனால், இந்த தடவை மற்ற இரண்டு சிறுவர்களுடைய கைகளையும் பிடித்துக் கொண்டு சேர்ந்து ஓடு என்று சொன்னார். அதே மாதிரி, அந்த சிறுவனும் மற்ற இருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சீராக ஓடினான். மூன்று பேரும் ஒன்றாக வெற்றிக் கோட்டைத் தொட்டார்கள். இதைப் பார்த்த, மொத்தக் கூட்டமும் கைத்தட்டி ஆரவாரம் செய்தது.

இப்படிப்பட்ட வெற்றி தான் திமுகவின் வெற்றி ! யார் யாரெல்லாம் உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு நாங்கள் ஓடுகிறோம். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களோடு கைகோர்த்து ஓடுகிறோம். அச்சுறுத்தப்படும் கைகோர்த்து பெரும்பான்மையின் பேரால் சிறுபான்மை மக்களோடு ஓடுகிறோம், கைகோர்த்து மாற்றுத்திறனாளிகளோடு ஓடுகிறோம். மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படுகிற திருநங்கை, திருநம்பிகளோடு கைகோர்த்து ஓடுகிறோம், காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்ட பெண்களோடு கைகோர்த்து ஓடுகிறோம். எந்தவொரு பாதிக்கப்பட்ட மக்களையும் விட்டுவிடாமல் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு ஓடுகிறோம்.

எல்லோரும் சேர்ந்து தான் வெற்றிக் கோட்டை தொட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் திமுகவின் தேர்தல் வெற்றியை ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியாகப் பார்த்துக் கொண்டாடுகிறார்கள். அதனால் தான் திமுக வெற்றிபெறும் போதெல்லாம், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது.

banner

Related Stories

Related Stories