
'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவிலேயே அயலக தமிழர் அணியை தொடங்கிய ஒரே கட்சி நமது திராவிட முன்னேற்ற கழகம்தான். தமிழ்நாடு அரசு 2021ம் அயலகத் தமிழர், மறுவாழ்வு துறையை உருவாக்கியது.
2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 58 நாடுகளிலிருந்து அயலக தமிழகர்கள் பங்கேற்றுள்ளனர். உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தாய் தமிழ்நாட்டில் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வரும்போதெல்லாம் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அயலக தமிழர்களாகிய நீங்கள்தான் இருக்கிறீர்கள். முன்பைவிட தமிழர்கள் இப்போது வெளிநாட்டில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர்.
அயலக நல வாரியம் மூலம் சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறோம். வெளிநாட்டு வேலை ஏற்பாடு மட்டுமல்ல அங்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. அயலக தமிழர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரிழந்த வெளிநாட்டுத் தமிழர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு 10 மாதங்களுக்கு மேல் ஆகும் என்றிருந்த நிலையை மாற்றியது நமது கழக அயலக அணிதான். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை 8 நாட்களுக்குள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் வகையில் தற்போது தி.மு.க அயலக அணி ஏற்பாடு செய்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நாள் நிகழ்வில் இலங்கை , மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள் , கவிஞர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ்ச் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிறைவு நாளான நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரை ஆற்றி எனது கிராமம் என்ற திட்டத்தை துவக்கி வைத்து, பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் 8 அயலக தமிழர்களுக்கு விருது வழங்குகிறார்.








