தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் தமிழகத்தை உலுக்கிய கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் அதிக அளவு பாதிப்பைச் சந்தித்ததுள்ளது.
இதனால் ஆங்காங்கே சிக்கியிருக்கும் மக்கள் முப்படை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த மழையால் மக்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் கடந்த 18ம் தேதியில் இருந்தே கனிமொழி எம்.பி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு தேங்கி உள்ள மழைநீர் வெள்ளத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
மேலும் தூத்துக்குடி புஷ்பா நகர் பகுதியில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். நேற்று அந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அதேபோல் ஏரல் சுற்றுவட்டார கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் படகுகள் மூலம் உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதுபோல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தினமும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கனிமொழி எம்.பி வழங்கி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து அவர்களுக்காகக் கனிமொழி எம்.பி இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.