தமிழ்நாடு

“அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்..” - தி.க. தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் செய்தி !

‘‘அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்! நாம் பெற்றதை இழக்கவும் விடமாட்டோம்!’’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

“அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்..” - தி.க. தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் செய்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

‘‘அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்! நாம் பெற்றதை இழக்கவும் விடமாட்டோம்!’’ என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள பிறந்த நாள் அறிக்கை வருமாறு:

“எனது வற்றாத பாசத்திற்குரிய கொள்கை உறவுகளே (குருதி உறவுகள் கொஞ்சம்; கொள்கை உறவுகளே நிரம்ப), உங்களுக்கு எனது தலைதாழ்ந்த நன்றியும், அன்பு கனிந்த வணக்கமும்! நாளை (2.12.2023) எனது 91 ஆம் ஆண்டு என்று எனக்கு நினைவூட்டி, தளர்ந்துவிடுவேனோ என்று எண்ணி, கொள்கை வழியில் உழைப்பதற்கும் என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள்.

அதற்காக அனைவருக்கும் நான் கடமையும், கடனும் பட்டிருக்கிறேன். உளங்கனிந்த பாச நன்றி அனைவருக்கும். எஞ்சிய எனது வாழ்க்கையும் - இயக்கப் பணிதான். வேறு பணி எனக்கு ஏது?

ஓய்வு என்பது ‘துரு’க்குச் சமமானது! :

எமது அறிவு ஆசான் வழியில், அவர் காட்டிய நெறிமுறையில் அலுப்பு சலிப்பின்றி, ‘ஓய்வு’ என்ற துரு என்னை அண்டவிடாமல், எச்சரிக்கையும், உற்சாகமும் குறையாது, எஞ்சியிருக்கும் காலத்தில் ‘‘என்றும் என் கடன் பணி செய்து கிடப்பதே!’’ என்ற, குன்றா ஆர்வமும், குறையா மகிழ்ச்சியும் பெறுகிறவன் என்பதால், வாழ்க்கை நீளுகிறது!

எனது வயதுக்குரிய உடல் உறுப்புகளின் ‘‘ஒத்துழையாமை’’ இருக்கத்தானே செய்யும்? :

அதை மறந்துவிட்டு, மேலும் களைப்பை ஒதுக்கிவிட்டு உழைக்க உத்தரவிடும் கொள்கை உறவுகள் உண்மைப் பாசம் பொங்கும் ஊக்க மாத்திரைகள் ஆவர். உற்சாக ஒத்துழைப்பு செயற்பாடுகளும் - வேறு எவருக்கும் எளிதில் கிடைக்காத பேறு அது! எம் அறிவு ஆசானுக்கு புத்தரின் ‘ஆனந்தனாக’ அவர்களது இறுதிக் காலம்வரை பயன்பட்டு வரும் வாய்ப்பு எனது பேறு - பெரும் பேறாகும்! 91 ஆம் ஆண்டு பிறந்த நாளில் எண்ணிப் பார்க்கிறேன் - குறைவற்ற வாழ்க்கை - நிறைவு மேவும் கொள்கை வயப்பட்ட பொதுவாழ்வின் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

“அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்..” - தி.க. தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் செய்தி !

பெரியார் தந்த புத்தி! :

‘‘பெரியார் தந்த புத்தி!’’ என்னை சரியாக - ஆசாபாசங்களுக்கு அப்பால் நிறுத்தி - வழிநடத்தி வருகிறது அன்றும் - இன்றும் - என்றும்! சொந்த புத்திக்கும், தந்தை பெரியார் தந்த புத்திக்கும் உள்ள வேறுபாடு அதுதான் என்பதை பலமுறை விளக்கியுள்ளேன். ‘‘பெரியார் தந்த புத்தி’’ என்ற வற்றாத செல்வத்திற்கு வாரிசு என்பது எனக்கு அது சரியான அடக்கத்தோடு அமைந்த அடையாளமும்கூட.

வியாபாரத்திலும் 24 வயதில் தந்தை பெரியார் கடைப்பிடித்த அறிவு நாணயம்! :

1903 இல் தந்தை பெரியார் (அன்று ஈ.வெ.ராமசாமி நாயக்கர் - வயது சுமார் 24) வியாபார ரீதியில் தந்தையின் கையெழுத்தை, தானே போட்டு அனுப்பிய ஒரு நிகழ்வுக்காக, அவர்மீது ஃபோர்ஜரி - கள்ளக் கையெழுத்து போட்டு மோசடி செய்துவிட்டார்’’ என்ற கிரிமினல் வழக்கில், அவர்மீது கிரிமினல் குற்றச்சாற்று வழக்கு - வெள்ளைக்கார கலெக்டர் - நீதிபதிமுன் வந்த போது, பிரபல வழக்குரைஞர்கள்

‘‘அக்கையெழுத்தை நான் போடவில்லை என்று நீதிபதியிடம் மறுப்புச் சொல்லுங்கள்; அது என் கையெழுத்து இல்லை என்று சொல்லி விடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்‘’ என்று எவ்வளவோ கூறியும், அவரது தந்தை வெங்கட்ட நாயக்கர் அழுது புரண்டு, தன் பிள்ளை ஜெயிலுக்குப் போனால், குடும்ப கவுரவம் நாசமாகிவிடுமே என்று கதறியும், தன் பிள்ளைமீதுள்ள பாசத்தாலும், கெஞ்சிக் கேட்டும், ‘‘தான் கையெழுத்துப் போட்டது உண்மைதான்’’ என்று கூறி, அதற்குரிய காரணத்தையும் விளக்கமாகக் கூறியுள்ளார் (‘விடுதலை’, 26.7.1952).

நமது இயக்கப் போராட்டத்தின் ஒளிவுமறைவற்ற உண்மைகளைக் கூறியும், தமது வாடிக்கையான வாழ்க்கை முறை எத்தன்மையானது என்பதை விளக்கும் அறிக்கையின் இறுதியில் உள்ள இந்த சில வரிகள் 120 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்பிருந்தே ‘பெரியார் நாணயத் தன்மை கொண்டது’ என்பது எப்படிப்பட்ட புத்தி என்பதை விளக்கமாகத் துலக்கும் - ஒப்பற்ற உண்மையை உணர்த்தும். அதை தமது இயக்கப் போராட்டங்களுடன் ஒப்பீடுகள் செய்து கூறிய கீழ்வரும் கருத்துகள் அது எத்தகைய வாழ்க்கை நெறி; வளையாத நன்னெறி என்பதை எவருக்கும் விளக்கும் அதிசய அறிவியல் பாடம்.

“அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்..” - தி.க. தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் செய்தி !

மறைவாக எதையும் செய்யக்கூடாது! :

‘‘எனது இந்த நடத்தை - கடவுளுக்காக - மோட்சத்திற்காக - சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. நேர்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன் -நம்மை நாமே எண்ணிக் கொள்வதில் ஒரு பெருமை, ஓர் ‘அகம்பாவம்‘, எங்கும் எப்போதும் யாரிடமும் பேசும்போது ஒரு துணிச்சல், தோல்வியிலும் ஒரு திருப்தி, மற்றவர்களுக்கும் நேர்மை, ஒழுக்கம்பற்றிய வழிகாட்டிடும் பிரச்சாரம்!

ஆதலால், ‘மறைவாக ஒன்றும் செய்யவேண்டாம்; எதையும் மறைக்காதே’ என்றேன். மற்றும் பல எடுத்துக்காட்டுகள் காட்டலாம்; அது தற்பெருமையாக முடியும். சுருக்கமாகச் சொல்வேன், நேர்மையாக நடப்பது சுயநலமும் ஆகும். எனது பலக் குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் - பொதுவாழ்வில் இந்த நாட்டில் நான் சாகாமல் இருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும்‘’ - தந்தை பெரியார். (அருள்கூர்ந்து தந்தை பெரியாரின் இந்த சொற்களை - கருத்தாழம் மிளிறும் இந்த முத்தான சத்தும், சாரமும் நிறைந்த இந்த வைர வரிகளை ஒருமுறை அல்ல பலமுறை ஊன்றிப் படித்து உண்மையை உணர முயற்சியுங்கள்).

அந்த ‘பெரியார் தந்த புத்தி’யைவிட, அதைப்பற்றிக் கொள்ளும் வேறு பெரிய புத்தி - அரிய பாடம் என்ற அந்த ஒரு காலத்தால் கரைக்க முடியாத கருவூலப் பெட்டகமே என்றும் என் வழி! இதுநாள் வரை நடத்தப்பட்ட கொலை முயற்சிகள், கொடும் அறுவைச் சிகிச்சைகள் மத்தியிலும் அந்த ‘நேர்மை’ மருந்து, நெறிவழுவா உண்மை என்றும் ‘வாட்டம்‘ இன்றி என்னை வாழ வைத்து வருகிறது!

என்னை வீறுகொண்டு பணியாற்ற செய்வது எதிரிகள்தான்! மீறி, வலி வரும்போது, கொள்கை வைரிகளான பகைவர்களின் செயல்பாடுகள்தான் என்னை மீண்டும் வீறுகொண்டு களமாட தூக்கி நிறுத்தி, துவளாது கடமையாற்ற கட்டளை இடுகிறது! கொள்கை உறவுகளான உங்களது உற்சாகமும், மகிழ்ச்சி பொங்கும் உறவு முத்திரைப் பொழிவுகளும், எனது வாழ்விணையர், மருத்துவர்களின் சரியான அன்பு, பாசம் கலந்த அரவணைப்பும், எப்போதும் திறந்த மனம் - நேர்மை நெறி என்ற பெரியார் தந்த - தரும் புத்தியும், என்னை வாழ வைக்கிறது! நீங்களும் நீண்ட நாள் பொதுவாழ்வில் வாழ வேண்டுமா? வளர வேண்டுமா? நேர்மையிலிருந்து வழுவாதீர்கள்! மானமும் அறிவும்தானே மனிதர்க்கு அழகு.

“அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்..” - தி.க. தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் செய்தி !

எனவே, அழகான வாழ்க்கைதான் ஏன் வேண்டும் நமக்கு? ‘தந்தை பெரியார் தந்த புத்தியுடன்’ செயல்பட்டு வருவதால், தனிப்பட்ட சுயநல வாழ்வுபற்றி சிந்திக்க நேரம் கிடையாது! மக்கள் - சமூகம் நலம் சார்ந்த கொள்கை வாழ்வே நமது முழு கவனத்திற்குரிய கடமை வாழ்வாகும். என்னையும் அறியாமல் சோர்வு சிற்சில நேரங்களில் ஏற்படும்போது, நமது கொள்கை எதிரிகள் அதனைப் போக்கிட பெரிதும் உதவுகிறார்கள் - பெரியார் தொண்டர்கள் தரும் ஊக்கத்தைவிட, கூடுதல் வேகம், உத்வேக உறுதியானவை அவை!

‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள்! :

தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் மற்ற மாநிலத்தவரும் பின்பற்றிடும் அளவுக்கு எடுத்துக்காட்டான ஆட்சியாக அச்சாதனைகள் ஒளிவீசுவதால், அதனை ஒழிக்க திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம், ஆளுநர்மூலம் அன்றாட அரசியல் குடைச்சல், நிதியைத் தராமல் நெருக்கிப் பிடிப்பது போன்ற ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியினரின் குறுக்கு வழி - ஆதாரமற்ற அபாண்ட அவதூறுப் பிரச்சாரங்களை வைத்து, மக்களை ஏமாற்றிட, பல ஊடகங்களின் துணையோடும், கூலிப் பட்டாளங்களின் துணையோடும் ஆரியம் ஆலவட்டம் சுற்றும் நிலை உள்ளதால், அதனை முறியடிக்கும் ஆற்றல் நம்மைப் போன்ற திராவிட இயக்கக் காப்பாளர்களுக்கு உண்டு - பெரியார் என்ற பேராயுதத்துக்கு உண்டு. அந்த அறப்போரில் அது தேர்தல் களமானாலும், வேறு எவ்வகைக் களமானாலும் சளைக்காது ஈடுபட்டாகவேண்டியது காலம் நமக்கிடும் கட்டளை!

அதனைக் கண்ணுங் கருத்தோடு செய்து முடிப்பதும், பிரச்சாரம் தொடங்கி எல்லாக் களங்களிலும் உழைக்கவேண்டியதும் நமது உயிர்மூச்சான கடமை அல்லவா!

ஆரியம் பல உருமாற்றத்தோடு களத்திற்கு வந்தாலும், அதைக் கண்டறியும் பகுத்தறிவு - நுண்ணறிவுப் புலம் நம்மிடம் உண்டு. அப்பணியே இனி எம் பணி!

எனது பிறந்த நாள் செய்தி! :

‘‘நமது அறிவு ஆசானிடம் கற்றதை மறக்கமாட்டோம்; அவர்களிடமிருந்து பெற்றதை இழக்கவிட மாட்டோம்‘’ என்பதே எளியவனின் பிறந்த நாள் செய்தியாகும்! எமது தோழர்கள் என்றென்றும் எம்முடன் இருந்து இப்பணியை வெற்றிப் பணியாக்கிட வீறுகொண்டு ஒத்துழைப்புத் தர அணியமாகி நிற்கும்போது - எனக்கு ஏது முதுமை -உணர்வில்? எனக்கு என்ன தயக்கம்? எனவே, எப்பொழுதும் பெரியார் முழக்கமே! ”

banner

Related Stories

Related Stories