தமிழ்நாடு

“படித்து முன்னேறி வாங்க… உங்களுக்கான இடம் காத்திருக்கிறது” : மாணவிகளுக்கு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்!

என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும் – மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்கவேண்டும்! நீங்கள் சாதிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடையவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“படித்து முன்னேறி வாங்க… உங்களுக்கான இடம் காத்திருக்கிறது” : மாணவிகளுக்கு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.11.2023) காணொலிக் காட்சி வாயிலாக கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து, தீரன் சின்னமலை சி.பி.எஸ்.இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைப்பதிலும், CBSE பள்ளிக்கு அடிக்கல் நாட்டி வைப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்!

தீரன் சின்னமலையின் பெயரை சொன்னாலே, இப்போதும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படும்! 'சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை' என்று சொல்லி இன்றைக்கும் வரலாற்றில் பெரும் மலையாக வாழுகிறவர்தான் தீரன் சின்னமலை.

விடுதலை உணர்புடன் போராடியதற்காக சிறை பிடிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டவர் தீரன் சின்னமலை! அவரைப் போன்றவர்களின் உயிர்த் தியாகத்தால்தான் இந்திய நாடு விடுதலை பெற்றது. அவருடைய பெயரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வைப்பதற்கு முதலில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“படித்து முன்னேறி வாங்க… உங்களுக்கான இடம் காத்திருக்கிறது” : மாணவிகளுக்கு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்!

திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலையில், 1991-ஆம் ஆண்டு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்டு, இன்றைக்கு 3,135 மாணவ மாணவியர் பயின்று வரும் மிகப்பெரிய பள்ளியாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் இங்கே அதிகம் படிக்கிறார்கள்.

இதன் அடுத்தகட்டமாக, மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது. கல்லூரி கட்டியது போக மீதமிருக்கின்ற இடத்திலேயும் பள்ளி தொடங்க முடிவு செய்திருக்கிறீர்கள். கல்லூரியை தொடங்கி வைப்பது - பள்ளிக்கு அடிக்கல் நாட்டுவது என்று, இரண்டு பணியையும் எனக்கு கொடுத்ததுதற்கு முதலில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொங்கு வேளாளர் அறக்கட்டளைத் தலைவர் பெஸ்ட் S.ராமசாமி அவர்களுக்கும், அறக்கட்டளையின் உறுப்பினர்கள் எல்லோருக்கும் என் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

தீரன் சின்னமலை பெயரில் கல்லூரி அமைக்க 28 ஏக்கர் நிலம் வாங்கியும் அனுமதி கிடைக்காமல் இருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இதே மேற்கு மண்டலத்திலிருந்து 9 பேர் அமைச்சர்களாக இருந்தும் அனுமதி கிடைக்கவில்லை. கல்லூரி கட்டியதற்காக இந்த நிலத்தின் வகையை கூட மாற்றிக் கொடுக்கவில்லை.

நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகு, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அருமை தோழர் சுப்பராயன் அவர்கள் தீரன் சின்னமலை கல்லூரி தொடர்பான அறக்கட்டளை நிர்வாகிகளை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்து இந்தக் கோரிக்கையை என்னிடத்தில் வைத்தார். நான் நேரடியாக கண்காணித்து, நில “வகை”-யை மாற்றிக்கொடுத்து கல்லூரி கட்டுவதற்கு இருந்த முதல் தடையை நீக்கினேன். பிறகு, உயர்கல்வித் துறை அனுமதி, கட்டட அனுமதி எல்லாவற்றையும் வழங்க ஆணையிட்டு- அதையும் நிறைவேற்றிக் கொடுத்தோம்.

“படித்து முன்னேறி வாங்க… உங்களுக்கான இடம் காத்திருக்கிறது” : மாணவிகளுக்கு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்!

இன்றைக்கு இந்தப் பகுதியில் இருக்கின்ற பெண்களுக்கான கல்லூரியாக இது மாறியிருக்கிறது. இதை நேரில் வந்து திறந்து வைக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால், என்னுடைய உடல்நிலை காரணமாக, நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்பாக சொல்லிவிட்டதால், காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல, முத்தமிழறிஞர் கலைஞரும் கொங்குப் பகுதி மக்களுக்காக நிறைய பாடுபட்டார். இதே மாதிரி, செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரிக்கு அருமை தோழர் சுப்பராயன் கோரிக்கைய ஏற்று - அனுமதி கொடுத்தார். அப்போது இது ஒன்றுபட்ட கோவையாக இருந்தது. எனவே, தி.மு.க ஆட்சியில்தான் இந்தப் பகுதிக்கு இரண்டு பெண்கள் கல்லூரிகள் வந்திருக்கிறது என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்

அதுமட்டுமில்லை, திருப்பூருக்கே ஆதாரமாக விளங்குகின்ற பனியன் தொழில் செழிக்க, உற்பத்தி வரியை தள்ளுபடி செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதுவும் “சட்டமன்ற உறுப்பினர் சுப்பராயன் கேட்டபடி ரத்து செய்யப்படுகிறது” என்று சட்டமன்றத்திலேயே கலைஞர் அறிவித்தார்.

“படித்து முன்னேறி வாங்க… உங்களுக்கான இடம் காத்திருக்கிறது” : மாணவிகளுக்கு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்!

கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவித்ததும் முத்தமிழறிஞர் கலைஞர்தான். இப்படி இந்தப் பகுதி வளரவும், இந்தப் பகுதி மக்கள் முன்னேறவும் - பெண்களுடைய கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வருவதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருமை நண்பர் சுப்பராயன் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் - பாட்டாளி வர்க்கத்துக்காகவும் தன்னை ஒப்படைத்துக்கொண்டு, நெடுநாட்களாக போராடி வருகிறவர்தான் நம்முடைய அருமை தோழர் சுப்பராயன் அவர்கள்! அதேபோல், ஒருங்கிணைப்பு செய்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் - சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் செல்வராஜ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி!

ஒரு காலத்தில் கல்வி என்பது எல்லாருக்கும் எளிதாக கிடைத்துவிடவில்லை. எட்டாக்கனியாக இருந்த கல்வி, இன்றைக்கு எல்லாருக்கும் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஏராளமான போராட்டங்கள் இருக்கிறது!

நீதிக்கட்சிக் காலத்திலிருந்து சமூகநீதியை வலியுறுத்தி வருகின்ற சமூக சீர்திருத்தத் தலைவர்களால்தான் இந்த மாற்றம் சாத்தியமாச்சு!

பெருந்தலைவர் காமராசர் பள்ளிக் கல்வியை ஊக்கப்படுத்தினார்!

அதை கல்லூரிக் கல்வியாக முத்தமிழறிஞர் கலைஞர் விரிவுபடுத்தினார்!

திரும்பிய பக்கம் எல்லாம் பள்ளியும், கல்லூரியும் உருவாக்கப்பட்டதால்தான், இன்றைக்கு வீடுகள்தோறும் பட்டதாரிகள் வலம் வருகிறார்கள்!

“படித்து முன்னேறி வாங்க… உங்களுக்கான இடம் காத்திருக்கிறது” : மாணவிகளுக்கு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்!

இன்னொரு பக்கம், உங்களை மாதிரியான சமூக அமைப்புகளும், சேவை மனப்பான்மையோடு பள்ளி – கல்லூரிகளை தொடங்கினார்கள். அதனால்தான் கல்வி நீரோடை தடங்கல் இல்லாமல் நாடு முழுவதும் பாயுது!

இந்தக் கல்வி வாய்ப்பை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாக பெண் பிள்ளைகள், கல்லூரிக் கல்வி – உயர்கல்விகள் என்று நிறைய படிக்கவேண்டும்!

பெண் கல்வியை ஊக்குவிப்பதற்குதான் அரசு பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக்கு வர மாணவிகளுக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருகிறோம்!

பெண்களுக்கு விடியல் பயணம் என்று கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுத்திருக்கிறோம்!

என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும் – மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்கவேண்டும்! நீங்கள் சாதிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடையவேண்டும்!

பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் எல்லாம் மலையேறி சென்றுவிட்டது! பெண்கள் உலகை ஆளுகின்ற காலம் வந்துவிட்டது!

வாங்க… உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது!

படித்து முன்னேறி வாங்க… வரலாற்றில் உங்களுக்கான இடம் காத்திருக்கிறது!

இதற்கெல்லாம், அரசு மாதிரியே சமூகநல அமைப்புகளும், கல்வி - மருத்துவம் போன்றவற்றில் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரைக்கும் இலவசமாக… இல்லையென்றால், குறைந்த கட்டணத்தில் அந்த சேவையை வழங்கவேண்டும்!

அதுமாதிரியான சேவையில் ஈடுபடுகின்ற கொங்கு வேளாளர் அறக்கட்டளை மேலும் மேலும் வளர வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன்.

தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் எதிர்காலத்தில் மிகச் சிறந்தவர்களாக எல்லா உயர்வையும் அடைய என்னுடைய வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories