தமிழ்நாடு

“நீட் தேர்வு உதயநிதியின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை..” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

திமுகவில் பல அணிகள் உள்ளதுபோல, பாஜகவில் ED, IT அணிகள் உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“நீட் தேர்வு உதயநிதியின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை..” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திமுக தலைமை தீர்மானக்குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூல்கள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு :

“10 மாவட்டங்களில் நூலகங்கள் அமைக்க ஒரு நூலகத்திற்கு ரூ.1 லட்சம் என தலா ரூ.10 லட்சம் இளைஞர் அணி சார்பில் திரட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் ரூபாய் நிதியை திர்மானக்குழு வழங்கியுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நமது கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், பல்வேறு அணிகளுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கினார். அதன்படி இளைஞரணிக்கு மூன்று பொறுப்புகள் வழங்கப்பட்டது. அவை,

* அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நூலகங்கள் அமைக்க வேண்டும்

* அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் மாரத்தான் போட்டிகள் நடத்த வேண்டும்

* தமிழ்நாட்டில் உள்ள சிறந்த 100 இளம் பேச்சாளர்களை தேர்ந்தெடுத்து ஊக்குவிக்க வேண்டும் - ஆகும்.

“நீட் தேர்வு உதயநிதியின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை..” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

திராவிட இயக்கம் என்றால் அறிவு இயக்கம். பேசும் இயக்கமாக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வளர்த்து இருக்கிறார்கள். அந்த வகையில் தான் நமது முதலமைச்சர் நூலகம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

திராவிட இயக்கத்திற்கும் தீர்மானத்திற்கும் நிறைய தொடர்புகள் உள்ளது. அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானம்தான் பிற்காலத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தீர்மானத்தை பெரியார் கொண்டு வந்தார். அதைத்தான் கலைஞர் அவர்கள், பெரியாரை அடக்கம் செய்யும்போது நெஞ்சில் தைத்த முள் முள்ளோடு எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த தீர்மானத்தை தற்போது முதலமைச்சர் சட்டமாக்கி இருக்கிறார். அந்த வகையில் இன்று, மூன்று பெண்கள் அர்ச்சகர்களாக ஆகியிருக்கிறார்கள்.

கலைஞரின் அடையாளம் பேனா. தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கழகம் உழைத்து கொண்டிருக்கிறது. நம்முடைய குழந்தைகளின் கல்விக்காகவும் வேலைக்காகவும் திமுக உழைத்துக் கொண்டு இருக்கிறது. நீட் போன்ற பல தேர்வுக்கு எதிர்த்து என்றும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.

நீட் தேர்வை எதிர்த்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சம் கையெழுத்துகள் ஆன்லைனில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் 50 லட்சம் கையெழுத்து பெற வேண்டும். நீட் தேர்வு என்பது திமுகவின் பிரச்சினை கிடையாது; ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்சினை.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு வார்த்தை, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு வார்த்தை என்று இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்ன சொன்னமோ, ஆளுங்கட்சியாக வந்த பின் அதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

“நீட் தேர்வு உதயநிதியின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை..” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. அவர் இறந்த பிறகுதான் பாஜக அரசும், அடிமை அதிமுக அரசும் நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது. நீட் தேர்வினால் 22 மாணவர்கள் தமிழ்நாட்டில் உயிரிழந்து இருக்கிறார்கள். நீட் தேர்வு உதயநிதியின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனின் பிரச்சினை. நீட் தேர்வை என்றைக்கு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றுகிறோமோ, அப்போதுதான் திமுகவுக்கு வெற்றி.

பாஜகவுக்கு இப்போதே தேர்தல் பயம் வந்துவிட்டது. அதனால்தான் ED, IT துறைகளை ஏவி வருகிறார்கள். திமுகவில் பல அணிகள் உள்ளதுபோல, பாஜகவில் ED, IT அணிகள் உள்ளது. எப்படி அதிமுகவை அடிமையாக வைத்திருந்தார்களோ, அதுபோல திமுகவையும் மிரட்டி வைக்க நினைக்கிறார்கள். ஆனால் திமுகவின் கிளைச் செயலாளர்கள் கூட இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள்

நான் பேசாததை எல்லாம் பேசினேன் என்று கூறி என் மீது வழக்கு தொடுத்தார்கள். என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள்; நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். வாரிசு என்கிறார்கள். ஆம் நாங்கள் வாரிசுதான்.. பெரியாரின் கொள்கை வாரிசுகள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பாஜகவிற்கு ரெய்டு விடப்போகிறார்கள்”

banner

Related Stories

Related Stories