தமிழ்நாடு

உலக அளவில் உற்பத்தி, சேவைத் துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் உற்பத்தி, சேவைத் துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.10.2023) சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில் நடைபெற்ற சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் (Capitaland) குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் ஆற்றிய உரை:-

கேப்பிட்டாலேண்ட் முதலீட்டு நிறுவனத்தின், சர்வதேச தொழில்நுட்பப் பூங்கா, சென்னை – ரேடியல் சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தரம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பப் பூங்காவை தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் புதியதொரு தொழில் புரட்சி நடந்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருக்கின்ற இந்த சர்வதேசத் தொழில்நுட்பப் பூங்காவில், 50 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகிற அளவுக்கான உலகத்தரம் வாய்ந்த அலுவலக இடங்கள் கட்டித்தர நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது இன்றைக்கு மிக மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது.

முதல் கட்டமாக,

•இன்றைக்கு 1.3 மில்லியன் சதுர அடிக்கான பூங்கா தயார் நிலையில், துவக்கி வைக்கப்பட இருக்கிறது.

•இரண்டாவது கட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் துவக்கி இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று இந்த நேரத்தில் நான் உறுதி அளிக்கிறேன்.

நான் கடந்த மே மாதம் சிங்கப்பூருக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தேன். அங்கே கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் எங்களால் மறக்க முடியாதது. இந்தப் பயணத்தின்போது, கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் C.E.O. திரு. சஞ்சீவ் தாஸ் குப்தா அவர்களை சந்தித்து, அவர்கள் நிறுவனம் பல முதலீட்டுத் திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்ளுவதை பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக, இந்த விழா நடைபெறுவது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வார்கள். அது போலவே நடந்திருக்கிறது. எங்கள் ஆட்சியின் மீதும், எங்கள் தமிழ்நாட்டின் மீதும் நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தொழில்துறையில் முதன்மை மாநிலமாக முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அது மட்டுமல்ல, இந்த வளர்ச்சி சீராகவும், பரவலாகவும் இருக்க வேண்டுமென்று மாநிலத்தில் இருக்கின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் 9 நியோ டைடல் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

உலக அளவில் உற்பத்தி, சேவைத் துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்துக் கொண்டு வருகிறோம். வளர்ந்து வருகின்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கின்ற வகையில், துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் பெருமளவில் ஈர்ப்பதற்காக திட்டங்கள் தீட்டினோம்.

உலக அளவில், அதிவேகமாக ஏற்பட்டு வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய தொழில்துறையும் பயணம் செய்வது இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தி, இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்கின்ற நோக்கத்தில்தான் "தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022” கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னால் வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தொழில்துறை கல்வியாளர்கள், புத்தாக்கம் மேற்கொள்வோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்ஸின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட GCC-க்கள் தங்களுடைய புதிய நிறுவனங்கள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். யு.பி.எஸ், வால்மார்ட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்களுடைய GCC மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அண்மையில் நிறுவியிருக்கிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும்.

இந்த வேகத்தை பார்க்கின்றபோது "203-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.

•பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசோ சிஸ்டம்,

•ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ்

•அமெரிக்க நிறுவனமான ஜி.இ. ஏவியேஷன் உடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள் (Centres of excellence) மற்றும் தொழில் புத்தாக்க மையங்களை (Start-Ups) தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது.

•திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் இருக்கின்ற சிப்காட் தொழிற் பூங்காக்களில், உலகத் தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் உற்பத்தி, சேவைத் துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அது மட்டுமல்ல, ஒரு துடிப்பான தகவல் தொழில்நுட்ப சூழலமைப்புடன் வளர்ச்சிக்குத் திறன் இடைவெளி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்று தான், என்னுடைய கனவுத்திட்டமான, நான் முதல்வன் திட்டத்தை முழு முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். உயர்கல்வி கற்பிக்கின்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, அவர்கள் துறையில் முதன்மையானவர்களாக திகழச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்.

இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்த சீரிய முயற்சிகள் காரணமாகதான், தமிழ்நாட்டில், முதலீடுகளின் வரத்து வளர்ச்சியடைந்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம்.

இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கின்றோம். உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதற்கு முன்னதாகவே, கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் இந்த அதிநவீன பன்னாட்டுத் தொழில்நுட்ப பூங்காவை தொடங்கி இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் தொழில் முயற்சிகள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories