தமிழ்நாடு

”ஆரியம் - திராவிடம் வித்தியாசம் இதுதான்” : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘எல்லார்க்கும் எல்லாம் உண்டு” என்று சொல்வது திராவிடம் என ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

”ஆரியம் - திராவிடம் வித்தியாசம் இதுதான்” : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.10.2023) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மலர்மாலை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடி ஆறாண்டு காலம் சிறையில் இருந்தவர் பசும்பொன் திருமகனார் அவர்கள். அவருடைய நினைவைப் போற்றுகின்ற வகையில் இன்று அவருக்கு நாங்கள் எல்லாம் வணக்கத்தை செலுத்தி இருக்கிறோம், அஞ்சலியை செலுத்தி இருக்கிறோம்.

“தேவர் திருமகன்”என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் அவரை அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். “எல்லாக் கட்சிகளும் ‘தலைவர் – தொண்டன்’ என்று வலம் வருகின்ற அந்த காலக்கட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் ‘அண்ணன் – தம்பி’ என்கிற பாசத்தோடு எப்படி கட்சி நடத்துகிறீர்கள்?” என்று ஆச்சரியத்தோடு பசும்பொன் அவர்கள், நம்முடைய மதிப்பிற்குரிய எஸ்.எஸ். தென்னரசு அவர்களிடத்திலே ஆச்சரியத்தோடு, மகிழ்ச்சியோடு, கேட்டிறிக்கிறார்கள்.

1963-ஆம் ஆண்டு தேவர் அவர்கள் மறைவெய்திய நேரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் நேரடியாக இங்கு வருகை தந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

1969-ஆம் ஆண்டு பசும்பொன்னுக்கு வந்து அவருடைய நினைவிடத்தை பார்வையிட்டு அதற்கு தேவையான அரசு உதவிகளைச் செய்தவர் தான் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.2007-ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் திருமகன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.

அப்போது, தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்து தந்ததும் - தேவர் இல்லத்தை 10 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்ததும் -

9 இலட்சம் ரூபாய் மதிப்பில் நூற்றாண்டு விழா வளைவு அமைத்ததும், 9 லட்சம் ரூபாய் செலவில் புகைப்படக் கண்காட்சி அமைத்துக் கொடுத்ததும், 4 இலட்சம் ரூபாயில் நூலகம், 5 இலட்சம் ரூபாயில் முடி இறக்கும் இடம், 5 இலட்சம் ரூபாயில் பால்குட மண்டபம், 5 இலட்சம் ரூபாயில் முளைப்பாரி மண்டபம் இப்படி எல்லாவற்றையும் அமைத்து கொடுத்தவர் தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.

தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்துக்கு மட்டும், மொத்தமாக 2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தான் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்!

”ஆரியம் - திராவிடம் வித்தியாசம் இதுதான்” : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதுமட்டுமில்லாமல், மதுரையில் இன்றைக்கு கம்பீரமாக தேவர் சிலை அமைந்திருக்கிறது என்றால், மதிப்பிற்குரிய பி.கே.மூக்கையாத்தேவர் முயற்சியால் அமைக்கப்பட்ட அந்த சிலைத் திறப்பு விழாவை, தலைவர் கலைஞர் அவர்கள் அரசு விழாவாக நடத்தி, அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி அவர்களை அழைத்து வந்து, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலேயே அந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

அதேபோல், மதுரை ஆண்டாள்புரம் பாலத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பாலம் என்று பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அறக்கட்டளை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

கழக ஆட்சி முதன்முதலாக உருவாகிய நேரத்தில், பல்வேறு சமூகங்களை சேர்ந்த பிரமுகர்கள், தங்களுடைய மக்களது கல்வி மேம்பாட்டிற்காக கல்லூரிகளை தொடங்குவதற்கு திட்டமிட்டார்கள். அவை எல்லாவற்றிற்கும் அனுமதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் அமையக் காரணமாக இருந்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்! இதில் மேலநீலிதநல்லூர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அதை கைப்பற்றி நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்ததும் 2021-ஆம் ஆண்டு அதை மீட்டுக் கொடுத்திருக்கிறோம் என்பதும் வரலாறு.

அதேபோல இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட, தமிழக அரசின் சார்பில் நான் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்.

தேவர் திருமகனார் நினைவிடத்தில், பொதுமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்த அவர்களுக்கு வசதியாக 1.50 கோடி ரூபாய் செலவில் இரண்டு நிரந்தர மண்டபங்கள் அமைக்கப்படும் என்று நான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறேன் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக, 1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று புது இடஒதுக்கீடு உரிமையை உருவாக்கி கல்வி, வேலைவாய்ப்பில் இந்தச் சமூக மக்கள் முன்னேற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவரும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

ஆகவே, தேவர் திருமகனார் அவர்கள் 'வீரராக பிறந்தார், வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார், அவருடைய மறைவுக்குப் பிறகும் வீரராகவே இன்றைக்கும் போற்றப்படுகிறார்'- என்று பசும்பொன் தேவர் பற்றி தலைவர் கலைஞர் இப்படியெல்லாம் பேசியிருக்கிறார். எனவே, அவருடைய சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அரசின் சார்பில், வாழ்க பசும்பொன் தேவர் பெருமகனார் புகழ்! என்று கூறி முடித்துக் கொள்கிறேன். நன்றி.

”ஆரியம் - திராவிடம் வித்தியாசம் இதுதான்” : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கேள்வி: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து...

முதலமைச்சர் அவர்களின் பதில்: அது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அவ்வப்போது உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்புகிறோம். வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொடர்பு கொள்கிறோம். பிரதமருக்கும் பல கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அவ்வப்போது சில முயற்சிகளில் அவர்களை விடுவிக்கிறோம். அண்மையில் கூட இராமநாதபுர பகுதியைச் சார்ந்த மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கக்கூடிய செய்தி கிடைத்து அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த செய்தி கிடைத்தவுடனே, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவரை தொடர்பு கொள்ள இன்று காலையில் கூட நம்முடைய நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர். பாலு அவர்களை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அவர் அங்கு சென்று இது குறித்து பேச சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், இராமநாதபுரம் பகுதியில் இருக்கக்கூடிய மீனவர் சமுதாயத்தின் சில நிர்வாகிகளையும் போகச் சொல்லியிருக்கிறோம். அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று இந்தப் பிரச்சனை குறித்து நேரடியாக சென்று பேச சொல்லியிருக்கிறோம்.

கேள்வி: ஆரியம் - திராவிடம் குறித்து சர்ச்சை உருவாக்கப்படுகிறதே?

முதலமைச்சர் அவர்களின் பதில் : “இன்னார்க்கு மட்டுமே இது” என்று சொல்வது ஆரியம். ‘எல்லார்க்கும் எல்லாம் உண்டு” என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை, இந்த உண்மையை தயவுசெய்து நம்முடைய ஆளுநர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து...

முதலமைச்சர் அவர்களின் பதில்: ஏற்கனவே இதுகுறித்து, ஒன்றிய அரசிடம் சொல்லியிருக்கிறோம். பார்ப்போம்.

கேள்வி: ஆளுநர் மாளிகையில் பாட்டில் குண்டு வீசப்பட்டுள்ளது குறித்து...

முதலமைச்சர் அவர்களின் பதில்: ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. மாளிகைக்கு வெளியில் தெருவில் வீசப்பட்டிருக்கிறது. அதனுடைய CCTV காட்சிகள் எல்லாம் காவல்துறை அதிகாரிகள் பத்திரிகை நிருபர்களை அழைத்து வெட்டவெளிச்சமாக காண்பித்திருக்கிறார்கள். ஆளுநர் மாளிகையிலிருந்து திட்டமிட்டு இந்தப் பொய் பரப்பப்படுகிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி கட்சியாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகையும் பி.ஜே.பி கட்சியின் அலுவலகமாக மாறியிருக்கிறது. அதுதான் வெட்கக்கேடு.

banner

Related Stories

Related Stories