தமிழ்நாடு

2024ம் ஆண்டு சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

2024ம் ஆண்டு சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு சென்னையில் 
பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் ‘கணித்தமிழ்24’ மாநாடு நடத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளோடு பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் 1999–இல் ‘தமிழ்இணையம்99’ மாநாடு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு இந்த மாநாட்டை முன்னெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘தமிழ்இணையம்99’ மாநாட்டின் விளைவாக உருவானதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மையான பணிகளாகும். மேலும், மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு 'தமிழ்99 விசைப்பலகை' உருவாக்கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழில் மென்பொருட்களை உருவாக்குவது தொடர்பான செயல்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில், ‘தமிழ்இணையம்99’ மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. செயற்கை நுண்ணறிவு குறித்து கடந்த நூற்றாண்டின் இறுதியிலேயே நாம் பேசத் தொடங்கிவிட்டாலும் அண்மைக் காலத்தில்தான் அது முழுவீச்சில் களம் கண்டிருக்கிறது. எனவே, வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழுக்கான இடத்தினை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் வழியாக, தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்த இயலும். புதிய தலைமுறையை இதன் பக்கம் திருப்ப இயலும்.

2024ம் ஆண்டு சென்னையில் 
பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தொழில்நுட்பத் துறையில் தமிழைப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டை ஒருங்கிணைக்கும். புது யுகத்திற்கு ஏற்றாற்போல் தமிழ் மொழியும் புத்தொளி பெற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியும் இந்த மாநாட்டின் இலக்காக இருக்கும்.

இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024 பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நடத்திய ‘தமிழ்இணையம்99’ மாநாடு நடைபெற்ற அதே நாளில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு (கணித்தமிழ்24) கலைஞர் நூற்றாண்டில் நடைபெறவிருப்பது சிறப்பான ஒன்றாகும். தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழுக்காகப் பங்களித்துவரும் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தமிழ் ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள். மேலும் மாநாடு தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.kanitamil.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு கீழ்க்காணும் அம்சங்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது:

உரைகள் மற்றும் குழு விவாதங்கள்:

தமிழறிஞர்கள், மொழித் தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழித் தொழில்நுட்பத்தை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களைச் சேர்ந்த ஆளுமைகள் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் விரிவுரை வழங்குவார்கள். ஆளுமைகளுக்கு இடையேயான குழு விவாதங்களும் நடத்தப்படும். செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் உரைகளும் குழு விவாதங்களும் நடைபெறும்.

2024ம் ஆண்டு சென்னையில் 
பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஆய்வுக் கட்டுரைகள்:

உலகெங்கிலும் கணினித்தமிழ் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுவருபவர்களிடமிருந்தும், தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்குவோரிடமிருந்தும் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, புத்தகமாகத் தொகுக்கப்படும். இயற்கை மொழிச் செயலாக்கம், இயந்திர மொழிபெயர்ப்பு, பேச்சுகளைப் புரிந்துகொள்ளல், உணர்வுப் பகுப்பாய்வு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும்.

நிரலாக்கப் போட்டி:

இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் என இரண்டு விதமாக நிரலாக்கப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் வழியாக இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் வழங்கப்படுவதோடு, சிறந்த முயற்சிகளுக்கான அங்கீகாரமும் வழங்கப்படும்.

கண்காட்சி:

மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதமாகக் கண்காட்சி அமையும். தொழில் துறையைச் சேர்ந்தவர்கள், புத்தொழில் (Startup) நிறுவனத்தினர் ஆகியோர் இதில் பங்கேற்பார்கள்.

தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. அதன் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக இந்த மாநாடு நடைபெறும். செயற்கை நுண்ணறிவு (AI), அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை உள்ளிட்ட தளங்களில் நடைபெறவிருக்கும் இந்தப் பன்னாட்டு மாநாடு அடுத்துவரும் சவாலான தொழில்நுட்ப யுகத்தை எதிர்கொள்வதற்கான அடித்தளங்களை அமைத்துத்தரும். மேலும், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கணித்தமிழ் தொடர்பாக நடந்திருக்கும் விவாதங்கள், முயற்சிகள், முன்னெடுப்புகள் முதலியவற்றை உள்ளடக்கிய சிறப்பு மலர் ஒன்றும் இந்தப் பன்னாட்டு மாநாட்டில் வெளியிடப்படும். இம்மாநாட்டுக்கென பிரத்யேக இலச்சினை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு தமிழ் மொழியைக் காப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். இந்தியாவில் வேறெந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத ஒரு திட்டத்தை முன்னோடியாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories