முரசொலி தலையங்கம்

உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!

தமிழ்நாடு எந்த வகையில் எல்லாம் அறிவில் சிறந்த, கல்வியில் சிறந்த, அனைத்து வகையிலும் சிறந்த வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது என்பதை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா உணர்த்தியது. - முரசொலி தலையங்கம்

உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

07.01.2026

உலகம் உங்கள் கையில்!

தமிழ்நாட்டு இளைஞர்கள் கையில் உலகத்தைக் கொடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 'நீங்கள் படியுங்கள், உங்களுக்கான அனைத்துத் தேவைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்'என்ற நம்பிக்கையை உருவாக்கி விட்டார் முதலமைச்சர் அவர்கள்.

20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதன் மூலம் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்து படிப்புகள் சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் மாணவ - மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8GB RAM, 256GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS -ஆகிய மென்பொருட்கள் உள்ளன. கல்வி மற்றும் திட்டப்பணிகளுக்காக MS Office 365, செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் வழங்கப்பட்டு உள்ளது.

“தமிழ்நாடு என்றால் கல்வி, கல்வி என்றால் தமிழ்நாடு என்ற பெயரை பெற்றுள்ளது” என்று மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் சொன்னதை மெய்ப்பிக்கும் விழாவாக அது அமைந்திருந்தது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த விழா என்பது மடிக்கணினி வழங்கும் தொடக்கவிழாவாக மட்டுமல்ல; தமிழ்நாடு எந்த வகையில் எல்லாம் அறிவில் சிறந்த, கல்வியில் சிறந்த, அனைத்து வகையிலும் சிறந்த வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது என்பதை உணர்த்தியது.

“சீனாவின் வளர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஒன்று. தமிழ்நாட்டைப்போல வேகமாக ஏன் முன்னேற முடியவில்லை என்பதை பிற மாநிலங்கள் சிந்திக்க வேண்டும். முதலீட்டாளர்களை இவ்வளவு வலுவாக தமிழ்நாடு ஈர்க்கக் காரணமாக இருப்பது திறமையான மனித வளம், தகுதியான கட்டமைப்பு வசதிகள், எளிமையான நிர்வாகம், பரிமாற்றத் திட்டங்கள் ஆகும்” என்று சொன்னார் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர் அரவிந்த் சுப்பிரமணியம்.

உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!

“ஒரு பையன் படிக்கிறான் என்றால் சொத்தை வித்தாவது கூலி வேலைக்குச்சென்றாவது படிக்க வைக்க நினைக்கும் நாடு தமிழ்நாடு. அத்தகைய மாநிலத்தில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது” என்று மனம் திறந்து பாராட்டினார் நடிகர் கார்த்தி.

“உங்களுக்கான தடைகளை உடைத்து முன்னோக்கி நகர்த்துகிறது அரசு. கல்வி கிடைப்பதன் மூலமாக தலைமுறையே வளர்கிறது. இந்த அரசாங்கம் தான் படி படி என்று திரும்பத் திரும்பச் சொல்கிறது. மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் முதலமைச்சருக்கு நன்றிகள்” என்று சொன்னார் நடிகர் விஜய் சேதுபதி. “உலக வரலாற்றில் ஒரு அரசு, எதைத் தனது மூலதனமாக நம்புகிறது என்பது முக்கியம். பயம், மிரட்டல், பக்தி என எத்தனையோ கருத்துகளை நாடுகள் மூலதனமாகப் பார்க்கின்றன. நமது 'திராவிட மாடல்' அரசு அறிவை, கல்வியை மூலதனமாகப் பார்க்கிறது” என்று அழுத்தமாகச் சொன்னார் நடிகர் மணிகண்டன்.

‘நான் முதல்வன்' திட்டத்தால் பலன் பெற்று ஐ.ஏ.எஸ்.ஆன அதிகாரிபிரசாந்த் பேசும்போது, “அம்மாவும் பாட்டியும் தான் என்னை வளர்த்தார்கள். பொருளாதாரத்தில் மிகப்பெரிய துன்பங்களை நான் எதிர்கொண்டேன். 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக கிடைத்த ரூ.1.15 லட்சம் தான் எனக்கு பெரும் உதவியாக இருந்தது. அதனை வைத்துத்தான் படித்தேன். இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கிறேன்” என்றார் பிரசாந்த்.

ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற இன்பா என்ற பெண் பேசும் போது, “எனது தந்தை பேருந்து நடந்துநர். எனது அம்மா பீடி சுற்றும் தொழிலாளி. நான் இன்று ஐ.பி.எஸ். ஆகி இருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு மேடையில் உங்களைப் போன்று கூட்டத்தோடு கூட்டமாக பின்புறம் உட்கார்ந்து இருந்தேன். இன்று ஐ.பி.எஸ். ஆகிவிட்டேன். அரசின் திட்டத்தால் தான் இது சாத்தியம். என்னைப் போல நீங்களும் ஆகலாம்” என்றார். தனது வாழ்க்கை மூலமாகவே அரசின் சாதனையைச் சொன்னார் இன்பா.

உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!

“ டீ கடையில் வேலை பார்க்கும் தந்தையின் மகளாக, 12 ஆம் வகுப்புக்குமேல் படிக்க முடியாத நிலைமையில் இருந்தேன். கல்விக் கடனுக்காக பல்வேறுவங்கிகளை நாடிய போதும் முழுமையான உதவி கிடைக்கவில்லை. ஆனால் அரசின் 7.5 இட ஒதுக்கீட்டால் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து இன்று நல்ல வேலையில், நல்ல ஊதியத்தில் இருக்கிறேன். 50 சதவிகிதம் தான் கடன் கொடுக்க முடியும் என்று சொன்ன வங்கிகள் இன்று எனக்கு ரூ.70 லட்சம் வரை வீட்டுக் கடன் வழங்கவும் தயாராக உள்ளன. இது எங்களுடைய வாழ்க்கையை மட்டுமல்ல; எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியுள்ளது. இதனை உருவாக்கிய முதலமைச்சருக்கு நன்றி” என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பவித்ரா சொன்னபோது அரங்கமே கண்கலங்கிக் கை தட்டியது.

“நாங்க இருக்கோம், நீங்கள் படித்துவிட்டு மட்டும் வாருங்கள். உலகம் உங்கள் கையில் என்று சொல்லும் அரசு இது” என்றார் பிரபலமான நகைச்சுவைப் பேச்சாளர் அலெக்சாண்டர் பாபு.

“உலகமே உங்கள் கையில் உள்ளது. நீங்களும் வென்று வாருங்கள், நாங்களும் வென்று வருகிறோம்” என்று மாண்புமிகு முதலமைச்சர் சொன்ன போது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

தமிழ்நாட்டு மாணவ சமுதாயம் வெல்லும். மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வெல்வார்.

banner

Related Stories

Related Stories