தமிழ்நாடு

“தெர்மாகோல் போட்டு மூடிவச்சிருக்கோம்..” - தனது பாணியில் செல்லூர் ராஜூக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் !

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ கேட்ட கேள்விக்கு, தெர்மாகோல் போட்டு தண்ணீர் மூடிவைத்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது

“தெர்மாகோல் போட்டு மூடிவச்சிருக்கோம்..” - தனது பாணியில் செல்லூர் ராஜூக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வினாக்கள் - விடைகள் நேரம் தொடங்கியது. அப்போது எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர் பதில் அளித்தனர். அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும்,மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏவமான செல்லூர் ராஜூ, மதுரைக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டார்.

“தெர்மாகோல் போட்டு மூடிவச்சிருக்கோம்..” - தனது பாணியில் செல்லூர் ராஜூக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் !

இதுகுறித்து பேசிய செல்லூர் ராஜு, "முல்லை பெரியாறு அணையில் இருந்து தங்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் ஆமைபோல் நடந்து வருகிறது. பணியை விரைவுபடுத்தி சுத்தமான நீர் வழங்க வேண்டும். அந்த திட்டத்தை அமைச்சர் முடித்துக் கொடுப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு, "முல்லை பெரியாறை மூலமாக கொண்டு கம்பத்தில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு 180 எம்.எல்.டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதே தவிர கிணறு தோண்டவில்லை. அங்கே கிணறு தோண்டுவதற்கு வனத்துறை அனுமதி தரவில்லை. நாங்கள் (திமுக ஆட்சி) வந்த பிறகே அனுமதி வாங்கப்பட்டது. இன்னும் 15 கி.மீ பணிகள்தான் பாக்கி உள்ளது. செல்லூர் ராஜூ கேட்டது போல் சுத்தமான தண்ணீரை நிச்சயம் வழங்குவோம்" என்றார்.

“தெர்மாகோல் போட்டு மூடிவச்சிருக்கோம்..” - தனது பாணியில் செல்லூர் ராஜூக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் !

இதைத்தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "மாண்புமிகு செல்லூர் ராஜூ கேட்டது போல் சுத்தமான தண்ணீர் நிச்சயம் வழங்கப்படும். அந்த தண்ணீர் காலியாகாமல் இருப்பதற்கு அணை இல்லை. எனவே தெர்மாகோல் போட்டு மூடிவைத்திருக்கிறோம். ஒன்றும் கவலைப்படாதீர்கள்" என்றார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, வைகை நதிநீர் அதிகமாக ஆவியாகி வீணாகிறது என்று தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணமாக இருந்த நிலையில், இந்த ஆவியாதலை தடுப்பதற்காக அதன் மீது தெர்மாகோல்களை அப்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மிதக்க விட்டார். இது தற்போது வரை அனைவர் மத்தியிலும் மறக்க முடியாத சிரிக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories