தமிழ்நாடு

காவிரி விவகாரம்: “மாறி மாறி ஏன் உத்தரவு.. எதற்கு ஒன்றிய அமைச்சர்?” - ஆவேசமாக சீறிய அமைச்சர் துரைமுருகன் !

காவிரி தொடர்பாக நாம் பெற்ற அனைத்து உரிமையும் உச்சநீதிமன்றம் மூலமே பெறப்பட்டது. இனி வரும் காலத்திலும் நீதிமன்றம் மூலமே உரிமையை பெறுவோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம்: “மாறி மாறி ஏன் உத்தரவு.. எதற்கு ஒன்றிய அமைச்சர்?” - ஆவேசமாக சீறிய அமைச்சர் துரைமுருகன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார்.

அதன்பிறகு, இன்று மாலை சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அமைச்சரிடம் நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டேன். கர்நாடகா பல அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்துள்ளது என்று நாங்கள் சொல்கிறோம். இல்லை என்று கர்நாடகா சொல்கிறது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என கண்டுபிடித்து சொல்லும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி ஒழுங்காற்று குழுவிற்குமே உள்ளது.

காவிரி விவகாரம்: “மாறி மாறி ஏன் உத்தரவு.. எதற்கு ஒன்றிய அமைச்சர்?” - ஆவேசமாக சீறிய அமைச்சர் துரைமுருகன் !

அவர்கள் தங்களது ஆட்கள் மூலம் ஆய்வு செய்து 13 ம் தேதி விநாடிக்கு 12,500 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கலாம் என்று கூறினார்கள், ஆனால், காவிரி ஒழுங்காற்று குழு 5 ஆயிரம் கன அடியை கொடுக்க வேண்டும் சொல்கிறது. எனவேதான் காவிரி ஒழுங்காற்று குழு நேர்மையாக நடக்கிறதா அல்லது கர்நாடகாவிற்கு அனுசரணையாக நடக்கிறதா என்று மத்திய அமைச்சரிடம் கேட்டேன்.

ஏனென்றால், இதை கேட்க வேண்டியது மத்திய அரசின் வேலை. கர்நாடகாவிடம் அது குறித்து கேட்கமுடியவில்லை என்றால், ஒன்றிய அமைச்சர் எதற்கு ? காவிரி மேலாண்மை ஆணைய தலைவரிடமும் பேசினேன், மாற்றி மாற்றி ஏன் உத்தரவு போடுகறீர்கள் என்று கேட்டேன்.

ஒழுங்காற்று குழு அதிகாரி ஒருவர் சொல்கிறார் கர்நாடகத்திற்கு குடிக்க தண்ணீர் தேவைப்படுகிறது என்று, தமிழகத்திற்கும்தான் காவிரி நீர் குடிக்க தேவைப்படுகிறது , நாங்கள் மட்டும் வாரிக் கொட்டவா காவிரியில் தண்ணீரை கேட்கிறோம். குடிக்கத்தான் கேட்கிறோம். தமிழகத்திலும் பல இடங்களிலும் காவிரி தண்ணீரைத்தான் குடிக்கிறோம் என்று கூறினார்.

காவிரி விவகாரம்: “மாறி மாறி ஏன் உத்தரவு.. எதற்கு ஒன்றிய அமைச்சர்?” - ஆவேசமாக சீறிய அமைச்சர் துரைமுருகன் !

மேலும் பேசிய அவர் காவிரி வழக்கில் நாளை உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உள்ள வழக்கறிஞரை இன்று சந்தித்து பேசியுள்ளேன், நாளை முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து பேசினோம். காவிரி தொடர்பாக தமிழகம் சொல்லும் எந்த கோரிக்கையையும், கர்நாடகம் இதுவரை கேட்டதே இல்லை. தமிழகத்தின் கோரிக்கைக்கு ஒரு நாளும், ஒரு துரும்பும், கர்நாடக அசைந்து கொடுத்ததே இல்லை.

காவிரி தொடர்பாக நாம் பெற்ற அனைத்து உரிமையும் உச்சநீதிமன்றம் மூலமே பெறப்பட்டது. இனி வரும் காலத்திலும் நீதிமன்றம் மூலமே உரிமையை பெறுவோம். கர்நாடக முதலமைச்சர் பிரதமரை சந்திக்க உள்ளது பற்றி கேட்கிறீர்கள், நாங்கள் சந்தித்ததை போல அவரும் நான்கு ஆட்களை அழைத்து சென்று சந்திக்கிறார். இது ஒன்றும் பெரிய காவடி எடுக்கும் வேலை இல்லை. காவிரி விவகாரத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என முதல்வரிடம் பேசி முடிவெடுப்பேன் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories