தமிழ்நாடு

“அண்ணா பிறக்காவிட்டால் ஆடுதான் மேய்த்துக்கொண்டிருப்பார் !..” - அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி !

“அண்ணாவின் பெருமை அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும்.” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.

“அண்ணா பிறக்காவிட்டால் ஆடுதான் மேய்த்துக்கொண்டிருப்பார் !..” - அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் முத்­த­மி­ழ­றிஞர் கலைஞர் சிலைகள் முன்பு வைக்கப்பட்ட பெரியார் திருவுருவப்படம் முன்பு கழக அமைப்புச் செய­லாளர் ஆர்.எஸ்.பாரதி தலை­மையில் பெரியார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு, சமூ­க­நீதி நாள் உறு­தி­மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பேரறிஞர் அண்ணா குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த நாளில் உறுதிமொழி ஏற்று வருகிறார்கள்.

“அண்ணா பிறக்காவிட்டால் ஆடுதான் மேய்த்துக்கொண்டிருப்பார் !..” - அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி !

பேரறிஞர் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அவருக்கு அரசியல் தெரியவில்லை என்பதை காட்டுகிறது. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் - "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று. அதுபோல அண்ணாவின் பெருமையை அண்ணாமலைக்கு தெரிவது நியாயம் கிடையாது. அவர் மரியாதையாக பேசுவது இனிமேல் நல்லது.

காரணம் திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் அண்ணாவைப் பற்றியோ பெரியாரைப் பற்றியோ எவன் பேசினாலும் அதை தாங்கிக் கொள்ளவோ அதைப் பற்றி அனுமதிக்கவோ மாட்டோம். அதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அண்ணா மறைந்த நாள் முதல் அண்ணா என்று தான் எல்லோரும் அழைக்கிறார்கள். அவரைவிட வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்று தான் அழைக்கிறார்கள்.

“அண்ணா பிறக்காவிட்டால் ஆடுதான் மேய்த்துக்கொண்டிருப்பார் !..” - அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி !

ஆனால் நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை, அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறார். அண்ணாமலைக்கு அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அண்ணாவைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அனுமதிக்க மாட்டோம். அண்ணாமலை தவறான புள்ளி விவரங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். 1956 ஆம் ஆண்டு அண்ணா பேசியதாக கூறுகிறார், 1949 இல் திமுகவை துவக்கி தனி பெரும் தமிழ்நாட்டில் பவனி வந்தவர்.

அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆடு மேய்க்கிற அண்ணாமலையை இன்று ஐபிஎஸ் ஆக உயர்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது அண்ணா போட்ட பிச்சை; பெரியார் போட்ட பிச்சை. அதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக கூறிக் கொள்கிறேன். இல்லை என்று சொன்னால் அண்ணாமலையின் நிலைமை என்னவாக மாறியிருக்கும்.

அண்ணாமலையின் பாட்டனார் இருந்திருந்தால், அண்ணாவின் பெருமையை சொல்லி இருப்பார். அண்ணாமலை இப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு மக்கள் வெகுண்டு எழுந்தார்கள் என்றால் அண்ணாமலை கர்நாடகத்தில் பணி செய்தாரே அந்த ஊருக்கு மிக விரைவில் ஓடிப் போகும் நிலைமை வரும்." என்று பேசினார்.

banner

Related Stories

Related Stories