தமிழ்நாடு

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

தி.மு.க என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் நாம் அஞ்சி விடமாட்டோம். எமர்ஜென்சியையே பார்த்தோம். எமர்ஜென்சியையே எதிர்த்தோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27-08-2023) திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. எம். செல்வராஜ் அவர்களது இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்

பின்னர் உரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் மகள் செல்வப்பிரியா - விக்னேஷ் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இங்கு நன்றி உரை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்களும், நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் அன்புக்குரிய முத்தரசன் அவர்களும், இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதை சுட்டிக்காட்டி, நாங்கள் கேட்டதும் தேதியைத் தந்து எந்தவித மறுப்பேதும் சொல்லாமல் வந்திருக்கிறேன் என்று பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள். 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

நான் தட்டாமல் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம், மண்ணின் மைந்தர் என்ற காரணம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்களைப் பொறுத்தவரைக்கும், அவர் அன்போடு - பண்போடு - பாசத்தோடு என்னிடத்தில் மட்டுமல்ல, எல்லோரிடத்திலும் பழகக்கூடியவர். 

நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனதற்குப் பிறகு, பல்வேறு மாவட்டங்களுக்கு - பல்வேறு பகுதிகளுக்கு - அரசு நிகழ்ச்சிகளுக்கு - கட்சி நிகழ்ச்சிகளுக்கு - பொது நிகழ்ச்சிகளுக்கு செல்கின்ற நேரத்தில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திருமண நிகழ்ச்சி இருந்தால் அதில் நான் பங்கேற்பது உண்டு. 

ஆனால் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரைக்கும் நானே மனமுவந்து இந்தத் தேதியை அவரிடத்தில் வழங்கி இந்தத் தேதியைப் பயன்படுத்திப் பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் தந்து மூன்று நாட்களாக இந்த டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். ஆனால் நடந்து முடிந்திருக்கும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை உங்களோடு சேர்ந்து நான் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

நாகை மாவட்டத்திற்கு ஒளியாகவும், மதியாகவும் இருக்கிறார் நம்முடைய செல்வராஜ் அவர்கள். 1975-இல் இருந்து தன்னை இந்த இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஏறக்குறைய 48 ஆண்டுகாலமாக இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருப்பவர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், நாகை, திருவாரூர் மாவட்டக் கழகத்தின் துணைச் செயலாளர், நாகை மாவட்டக் கழகத்தின் செயலாளர், மாநில நிர்வாகக் குழுவின் உறுப்பினர், தேசிய குழுவின் உறுப்பினர் - இவ்வாறு பல்வேறு பொறுப்புகளில் இருந்து இயக்கப் பணி – பொதுப் பணி - மக்கள் பணி ஆற்றியிருப்பவர் நம்முடைய செல்வராஜ் அவர்கள். 

தற்போது கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக, AITUC-யின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய பொறுப்புகளை, இவ்வளவு பதவிகளில் எல்லாம் இருந்து கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தாலும், ஒரே வரியில் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் ஒரு மக்கள் தொண்டராக இருந்து தன்னுடைய கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

ஏழு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் நம்முடைய செல்வராஜ் அவர்கள். அதில் நான்கு முறை, அதாவது 1989 - 1996 - 1998 - 2019 - இந்த ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அவர் எம்.பி.ஆக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இந்த நான்கு முறை வெற்றி பெற்றார் என்றால், தி.மு.க.வின் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு இருக்கும் சிறப்பு. 

எனவே மக்கள் மன்றத்தில் – நாடாளுமன்றத்தில், மக்களுக்காக - தொழிலாளர்களுக்காக - விவசாயிகளுக்காகத் தொடர்ந்து போராடக் கூடியவர், வாதாடக் கூடியவர் நம்முடைய செல்வராஜ் அவர்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், தென்னக ரயில்வே தொடர்பாக டெல்டா மாவட்ட மக்களுக்காக அவர் நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் உழவர்களின் கோரிக்கைக்காக ஒரே நேரத்தில், நாகை மாவட்டத்தில், 50 இடங்களில் மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர் நம்முடைய செல்வராஜ். எனவே அப்படிப்பட்ட ஒரு செயல் வீரர் - ஒரு ஆற்றலாளர் - ஒரு மக்கள் தொண்டர். இப்படிப்பட்ட பல்வேறு பெருமைகளை பெற்றிருக்கும் நம்முடைய செல்வராஜ் அவர்கள் இல்லத்தில், அவருடைய மகளுக்கு நடைபெறும் இந்தத் திருமணத்தில் நான் கலந்து கொண்டு, அந்த மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் – தி.மு.க.விற்கும் எப்பொழுதும் நட்பு உண்டு, அன்பு உண்டு. கலைஞர்தான் அடிக்கடி சொல்வார், பெருமையோடு சொல்வார். தந்தை பெரியாரை நான் பார்த்திருக்காவிட்டால், அறிஞர் அண்ணாவை நான் சந்தித்திருக்காவிட்டால், நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன் என்று பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். 

எனவே அந்த உணர்வோடு நம்முடைய நட்பு, தேர்தலுக்காக நட்பு மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் நட்பு மட்டுமல்ல, கொள்கை நட்பு. அதுதான் முக்கியம். எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறபோதும் தொடர்கிறது. தொடர்கிறது என்றால், இது என்றைக்கும் தொடரும். உறுதியாக சொல்கிறேன், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாகத் தொடரும் என்பதை இந்த திருமண விழா பகிரங்கமாக அறிவிக்கிறேன். 

ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திக்க இருக்கிறோம் என்று சொன்னால், ஏதோ ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தலாக மட்டும் நாம் நினைத்து விடக்கூடாது. அதையும் தாண்டி சொல்கிறேன், ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறும் தேர்தலாகக் கூட நீங்கள் நினைத்து விடக்கூடாது. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் - ஒரு பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் – பி.ஜே.பி. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம். இந்தியாவைக் காப்பாற்றும் நிலைக்கு நாம் இப்போது வந்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் ‘இந்தியா‘ கூட்டணி அமைந்திருக்கிறது. 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் தலைமையில் கூடி எதிர்க்கட்சியில் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி உருவாக முதல் கூட்டத்தை பீகார் மாநிலத்தில் நடத்தினோம். அதற்கு அடுத்து கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம். அதில்தான் இந்தியா என்ற பெயரைத் தேர்வு செய்து நம் கூட்டணிக்கு பெயர் அறிவித்தோம். அடுத்த வருகின்ற ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவுகளை எல்லாம் நாம் அறிவிக்க இருக்கிறோம். நானும் அந்தக் கூட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். 

எனவே தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எல்லாம் எவ்வாறு காரணமாக இருந்தீர்களோ அதே போல் ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக ஒன்றிய அரசு அமைவதற்கு அது நல்லரசாக அமைவதற்கு நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும். 

தேர்தல் பிரச்சாரத்தை இங்கே தொடங்கி வைக்க வேண்டும் என்று நம்முடைய முத்தரசன் குறிப்பிட்டார்கள். தொடங்கத்தான் வந்திருக்கிறேன், நான் எப்போதுமே தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில்தான் தொடங்குவேன். இப்போதும் அதே உணர்வோடுதான் இந்த மேடையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

ஒன்பது வருடமாக பி.ஜே.பி.யின் ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது வருடமாக நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை செய்திருக்கிறோம், இந்தத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம், நிறைவேற்றி இருக்கிறோம், சாதனைகளைப் படைத்திருக்கிறோம், மக்களுக்கு எல்லாம் இப்படி நன்மைகளை செய்திருக்கிறோம் என்று ஏதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா? எதுவும் சொல்ல முடியவில்லை. 

தேர்தலுக்கு முன்னால் என்ன சொன்னார்கள், வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் கைப்பற்றி அதை இந்தியாவிற்குக் கொண்டு வந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்போகிறேன் என்று அறிவித்தார். நான் பல கூட்டங்களில் கேட்டேன். நான் மட்டுமல்ல, எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது தந்தார்களா? 15 ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது தந்தார்களா? இதுவரையில் இல்லை. 

நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு ஆண்டிற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று உறுதிமொழி தந்தார்கள். எங்காவது ஒன்றிய அரசின் மூலமாக வேலை வழங்கப்பட்டு இருக்கிறதா? இல்லை. வேலைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த ஆட்சியின் நிலை. இதைப்பற்றி நாம் ஒரு பக்கத்தில் பேசுகிறோம். 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

இதைவிட கொடுமை. மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை இரண்டாக்கும் சூழ்நிலையில் ஒரு கொடிய ஆட்சி இன்றைக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் கலந்து பேசி இதற்கான முடிவெடுக்க வேண்டும், இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும், தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா என்ற தலைமையில் ஒரு கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம். 

இதைப் பிரதமர் மோடியால் தாங்க முடியவில்லை. அதிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் எப்படி நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் - ஒரு கூட்டணி அமைத்து ஸ்ட்ராங்காக அந்தக் கூட்டணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறோமோ, அந்தக் கூட்டணி தொடர்ந்து தமிழ்நாட்டில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். எனவே அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் இந்தக் கூட்டணியும் அந்த இந்தியா கூட்டணியில் சேர்ந்திருக்கிறது.

இந்தியா என்ற கூட்டணி உருவாகுவதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்தக் கூட்டணி காரணமாக இருக்கிறது என்ற ஒரு ஆத்திரம் இன்றைக்கு பிரதமராக இருக்கும் மோடிக்கு வந்துவிட்டது. அதனால்தான் எங்கு சென்றாலும், அது சுதந்திர தின நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கொடியேற்று விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது பல மாநிலங்களுக்குச் சென்று அங்கு நடத்தும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி - எங்கு சென்றாலும் இன்றைக்கு நாம் அமைத்திருக்கும் கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார், கொச்சைப்படுத்தி பேசுகிறார். 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

அதிலும் தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய அணியைப் பற்றி, குறிப்பாக தி.மு.க.வை பற்றி இன்றைக்கு அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்குக் கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.

என்ன பேசுகிறார்? தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாம். ஒன்பது வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். "எனவே அந்த ஊழலை ஒழித்தே தீருவேன். இந்தியாவில் இருக்கும் ஊழலைத் ஒழித்தே தீருவேன்" என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். 

நான் பிரதமர் மோடி அவர்களை பார்த்து அடக்கத்தோடு கேட்க விரும்புவது, ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டா? உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது சி.ஏ.ஜி. ஆதாரங்களோடு எடுத்து வெளியிடுகிறார்களே, எல்லாவற்றையும் குறித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். ஏனென்றால் புள்ளி விவரம் இது. தவறாகப் பேசி விடக்கூடாது. எதையும் ஆதாரத்தோடுதான் பேச வேண்டும். அதற்காக நான் புள்ளி விவரத்தை எல்லாம் குறித்து கையில் எடுத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். 

ஊழலைப் பற்றி பேசுவதற்கு பி.ஜே.பி.க்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்கிறேன். சி.ஏ.ஜி. அறிக்கை இன்றைக்கு என்ன சொல்கிறது. சி.ஏ.ஜி. அறிக்கை என்பது ஒரு ஆய்வு அறிக்கை. மத்திய அரசிற்குக் கட்டுப்பட்டு இருக்கும் அந்த அமைப்பு. அது ஒவ்வொரு வருடமும் அன்றைக்கு அரசின் நிலையைப் பற்றி, அந்த அரசு செய்திருக்கும் செலவுகளை பற்றி ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் சி.ஏ.ஜி.யின் வேலை. 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

அந்த சி.ஏ.ஜி. என்ன சொல்கிறது என்றால், ஒன்றியத்தில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சி - ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்ச லாவண்யம் பெருத்துப் போன ஆட்சி என்று சொல்கிறது. நாங்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சி சொல்லவில்லை. நாங்கள் சொல்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் ஏற்கனவே சொல்லிக் கொண்டிருக்கிறோம் அது வேறு. இப்போது யார் சொல்கிறார்? சி.ஏ.ஜி. சொல்கிறது. மத்திய கணக்குத் துறையின் அறிக்கை சொல்கிறது. 

ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒன்று, இரண்டு அல்ல - ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 

* பாரத்மாலா திட்டம்

* துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம்

* சுங்கச் சாவடி கட்டணங்கள்

* ஆயுஷ்மான் பாரத் திட்டம்

* அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்

* கிராமப்புர அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம்

* எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் 

இந்த ஏழு திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறது. நிதியைக் கையாளுவதில் மோசடிகள் அரங்கேறி இருக்கிறது என்று இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தி இருக்கிறது. 

* அதாவது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் - 99999 99999 என்ற ஒரே போலி செல்போன் நம்பரில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு ஊழல் நடந்திருக்கிறது. எவ்வாறு பச்சையாக ஒரு மோசடியை செய்திருக்கிறார்கள் பாருங்கள்! 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற நோயாளிகளில், 88 ஆயிரத்து 760 பேர் இறந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் இறந்த பிறகும், சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லி, 2 லட்சத்து 14 ஆயிரத்து 923 காப்பீட்டுக் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. 

தகுதியில்லாத குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, சுமார் 22 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது. இதை நாங்கள் சொல்லவில்லை. எங்கள் இந்தியா கூட்டணி சொல்லவில்லை. இதைக் கண்டுபிடித்து, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆய்வறிக்கை வெளியிடும் சி.ஏ.ஜி. அறிக்கை சொல்கிறது.

* துவாரகா விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடி ரூபாயாக இருந்த செலவு 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நன்றாக கவனியுங்கள்! திட்ட மதிப்பை விட, 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டிருக்கிறது.

* அயோத்தியில் ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்துகிறோம் என்று சொல்லி ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள்.  இதில் விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் தரப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

* பாரத்மாலா திட்ட டெண்டர் முறைகேடுகளை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தி இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததைவிட, இரண்டு மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

* நாடு முழுவதும் சுமார் 600 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இதில் 5 சுங்கச்சாவடிகளை மட்டும் சி.ஏ.ஜி. ஆய்வு செய்திருக்கிறது. அதில் விதிகளுக்குப் புறம்பாக, 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பரனூர் சுங்கச்சாவடியும் இதில் ஒன்று. இந்த ஒரே ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் ஆறரை கோடி ரூபாய் முறைகேடாக வசூலித்திருக்கிறார்கள். எனவே நாடுமுழுவதும் ஆய்வு நடத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வெளிச்சத்திற்கு வரும் என்று அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

* இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான எந்திரம் வடிவமைப்பில் 159 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

* ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டப் பணத்தை எடுத்து ஒன்றிய அரசு விளம்பரத்துக்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

இவ்வாறு என்னென்ன முறைகேடுகள்? எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த ஆய்வறிக்கை - அந்த நிறுவனம் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறது. 

அதே சி.ஏ.ஜி. அறிக்கையின்படி ஒன்றிய அரசுத் துறைகளில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. 

ஊழலைப் பற்றி ஒன்றிய அமைச்சர் அமித் ஷாஅவர்கள் அதிகம் கவலைப்படுகிறார். இன்னொரு அமைப்பு சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், அதாவது சி.வி.சி. என்ன சொல்கிறது என்றால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. 

ஒன்றிய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள் - அலுவலர்கள் மேல்தான் கடந்த வருடம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதையும் நான் சொல்லவில்லை. சி.வி.சி. அறிக்கைதான் சொல்கிறது. 

அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு மட்டுமே, 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதில் உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46 ஆயிரத்து 643 புகார்கள் பதிவாகி இருக்கிறது.

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் செய்த தவறை எல்லாம் மூடி மறைத்து, நம்மீது வீண்பழியை சுமத்தி, இவற்றைப் பற்றி எல்லாம் தி.மு.க. பேசுகிறதே, தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேசுகிறதே என்று ஆத்திரம் ஏற்பட்டு, கோபம் ஏற்பட்டு, எரிச்சலில் நம்மை பழி வாங்குவதற்காக இன்றைக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்று நம்மை எல்லாம் மிரட்டி பார்க்கிறார்கள். 

இதையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கிவிடுகிற கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாம் அஞ்சி விடமாட்டோம். எமர்ஜென்சியையே பார்த்தோம். எமர்ஜென்சியையே எதிர்த்தோம். எனவே எதைப் பற்றியும் தி.மு.க. கவலைப்படத் தயாராக இல்லை. அதேபோல் இந்தியா என்று அமைப்பில் இருக்கும் கூட்டணியும் இதைப் பற்றி கவலைப்படவும், சிந்திக்கவும் தயாராக இல்லை. 

எனவே தங்களுடைய லஞ்ச லாவண்யங்களை மூடி மறைப்பதற்காக, இன்றைக்கு மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இனி வரும் காலகட்டங்களில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்தியாவையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது. அந்த இந்தியா கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போர் வீரர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்கள். 

“எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!

அந்த செல்வராஜ் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். எனவே மணவிழா காணும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும். 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் இருந்து, உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். 

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திட்டங்கள், சாதனைகள் அத்தனையும் உங்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் எந்த அளவிற்குப் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு புரியும். 

நேற்று முன்தினம், 25-ஆம் தேதி, திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளியில் தொடங்கிய திட்டம்தான் காலை உணவுத் திட்டம். இது தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டம் அல்ல. எனவே சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் இன்றைக்கு இருக்கும் திராவிட மாடல் ஆட்சி. அதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் அமைந்திருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. ஒரு கோடிக்கும் குறையாமல், அதைவிட அதிகமாகத்தான் வரும் என்று இன்றைக்கு கணக்கு விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வந்தாலும் கவலை இல்லை. யார் யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாக அந்த தொகை சென்று சேரப்போகிறது.

 இப்படிப்பட்ட இந்த ஆட்சிக்குத்தான் இன்றைக்கு நீங்கள் துணை நின்று கொண்டிருக்கிறீர்கள். எப்படி தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி உருவாகுவதற்கு, திராவிட மாடல் ஆட்சி உருவாக்குவதற்கு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றியத்தில் ஒரு சிறப்பான ஆட்சி உருவாக நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு, வாழ்க மணமக்கள்… வாழ்க மணமக்கள் என்று தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

banner

Related Stories

Related Stories