தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.8.2023) மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- தருமபுரம் ஆதீனத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, பல நல்ல நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியோடு அரங்கேற்றும் வாய்ப்பை இந்த மேடையில் நான் பெற்றிருக்கிறேன்.
16-ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்ட மிக மிகப் பழமையான மடம், இந்த தருமை மடம். திருவில்லிப்புத்தூரில் பிறந்து, மதுரையில் ஞானம் பெற்று, திருவாரூருக்கு வந்து சேர்ந்த குருஞான சம்பந்தர் உருவாக்கியது இந்த மடம். அன்று முதல் இன்று வரை ஆன்மீகப் பணிகளிலும், தமிழ்ப் பணி - மருத்துவச் சேவை - கல்விப் பணி – அறப்பணி ஆகிய சமூக பணிகளிலும் தருமை மடம் ஈடுபட்டு வருகிறது. இந்த தொண்டுள்ளம் தொடர்ந்து தொய்வின்றித் தொடர வேண்டும்.
1946-ஆம் ஆண்டு தருமை ஆதீனத்தின் 25-ஆவது குருமகா சந்நிதானம் அவர்கள் தொடங்கிய இந்தக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் 1972-ஆம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும், பொன் விழா நிகழ்ச்சியில், கல்வி அமைச்சராக இருந்த இனமானப் பேராசிரியர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.
இப்போது பவள விழா கண்ட இந்த கலையரங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு இங்கு பவள விழா. இந்த முப்பெரும் விழா கொண்டாடுகிற நேரத்தில் பவளவிழாவையும் இணைத்து நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்று கேட்டால், வரக்கூடிய செப்டம்பர் மாதம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பவள விழாவை நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அந்த பவள விழாவை கொண்டாடுவதற்கு முன்பே உங்கள் பவள விழாவில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு திருவாரூர் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த மகா வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் பின்னாட்களில் இந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் என்ற சிறப்பும் இந்தக் கல்லூரிக்கு உண்டு என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தருமை ஆதீன மடத்துடன் தமிழ் நட்பு மட்டுமல்ல, எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டு. தருமை ஆதீனத்துக்கு கட்டுப்பட்ட 27 கோவில்களில் ஒன்றுதான் தலைவர் கலைஞரின் திருக்குவளை ஆகும். அதனால்தான் எங்களுக்கும் இந்த தருமை ஆதினத்துக்கும் குடும்ப தொடர்பு உண்டு என்று நான் கொஞ்சம் கம்பீரமாக, உரிமையோடு சொன்னேன்.
1972-ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற வெள்ளிவிழாவில் உரையாற்றிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இன்னொரு தகவலையும் சொன்னார்கள். அது என்னவென்று கேட்டால், நவகிரகங்களையும் ஒன்று சேர்த்து குடமுழுக்கு நடத்திய நேரத்தில் கொடிமரத்தைச் சுற்றுகிற பெண்கள் பாட்டுப் பாடுவது வழக்கமாம். அதுவரையில், அப்படி பாட்டு எழுதப்படாத சூழலில் அருகில் இருந்த எனது தாத்தா, தலைவர் கலைஞருடைய தந்தை, என் தாத்தா, முத்துவேலரிடம் சொல்லி ஒரு பாட்டு எழுதக் கேட்டு இருக்கிறார்கள்.
அப்போது அந்த இடத்திலேயே முத்துவேலரும் ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக தட்டி சுற்றும் பெண்கள் அதனை பாடி இருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் ஆலயத்துக்குள் நவகிரகங்களைக் கொண்டு சென்றார்களாம். இது கலைஞர் அவர்கள் சிறுபிள்ளையாக பார்த்த காட்சி. இதனை தலைவர் கலைஞர் அவர்களே தருமை கல்லூரி வெள்ளிவிழாவில் உரையாற்றும் போது சொல்லி இருக்கிறார். திருக்குவளை ஆலயத்திலும் முத்துவேலர் அவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.
நம்முடைய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு என்று பெயர் பெற்றிருந்தாலும், நாங்கள் எல்லாம் அவரை எப்போதும் செயல்பாபு, செயல்பாபு என்றுதான் பெருமையோடு அழைப்பதுண்டு. அந்த பெருமைக்குரிய சேகர்பாபு அவர்கள் மூலமாக நான் நம்முடைய 27-ஆவது குருமகா சந்நிதானம் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்து இருக்கிறோம்.
எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கருத்தியலுக்குள் எல்லாமும் அடங்கி இருக்கிறது. அந்த வகையில் அனைத்துத் துறையையும் சம விகிதத்தில் நாங்கள் வளர்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையை மிகமிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
ஆலயங்களில் அன்னைத் தமிழ்
3000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு
அறநிலையத் துறை சார்பில் 10 கலைக் கல்லூரிகள்
கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு
இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழா நடத்த உத்தரவு
திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு
தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் என இந்து சமய அறநிலையத் துறையைக் காத்து வரும் ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி! இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல, அதை அறிந்துகொண்டு வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
நீதிபதிகளே அறநிலையத் துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து, வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
“முதலமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல, திருக்கோவில்களின் விடியலுக்கும் வழிகாட்டியாக உள்ளது" என்று பல்வேறு மடாதிபதிகள் வெளிப்படையாக பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. நாளை மாணவர்களின் பசியாற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அது விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய அந்தத் திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து அதை நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஏக்கத்தை போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம்தான் காலை உணவுத் திட்டம்!
அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்று ஏங்கும் ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் குருமகா சந்நிதானங்களும் – தமிழ்நாட்டு மக்களும் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்கு போதுமானது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும் போதெல்லாம் ஆன்மீகப் பெரியவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்கள். போராடி இருக்கிறார்கள்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் இனம் - மொழி - நாட்டு உரிமை காக்க ஆன்மீக ஆளுமைகள் தனது பங்களிப்பை கடந்த 100 ஆண்டுகளாகச் செலுத்தியதைப் போல இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும்.
தமிழ் மொழி காப்பாற்றப்பட வேண்டும். தமிழர்கள் காப்பாற்றப்பட்ட வேண்டும். தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும் - இந்த மூன்றும் காப்பாற்றப்பட்டால்தான், இதுபோன்ற தமிழ் மடங்கள் எந்த நோக்கத்துக்காக 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்.
இங்குள்ள மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், கல்வியில் மிக மிக உயரங்களை நீங்கள் அடைய வேண்டும்.
நேற்று சந்திரயான்-3 விண்கலம் நிலாவில் தரையிறங்கிருப்பதன் மூலமாக, நமது இந்திய நாட்டை உலகமே வியப்போடு திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தச் சாதனைக்கு பின்னால், சந்திரயான்-3 விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர், நமது தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் அவர்கள். அது மட்டுமல்ல, அரசுப் பள்ளி ஒன்றில் படித்து இன்று இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர் போன்ற அறிவியலாளர்களை, கல்வியில் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் நீங்கள் சாதனைகள் படைக்க வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு – செயல்படுவதற்கான உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தயங்காமல் சொல்லுங்கள். நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறோம். இது எனது அரசல்ல, நமது அரசு. மீண்டும் சொல்லுகிறேன். இது எனது அரசல்ல, நமது அரசு.” எனத் தெரிவித்துள்ளார்.