விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் மீனவ கிராமங்களில் மீன் வாங்க பொதுமக்கள் வருவதால் அங்கே விற்பனைக்கு பலரும் வருவர். அந்த வகையில் புதுகுப்பம் பகுதியை சேர்ந்த 6 மீனவ பெண்கள் சாலையோரம் ஆட்டோவுக்காக காத்திருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சொகுசு கார் (swift) ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் கார் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் இருந்த அந்த மீனவ பெண்கள் மீது காரை வைத்து மோதினார். இந்த கோர விபத்தில் லட்சுமி என்ற 45 வயது பெண், மற்றும் கோவிந்தம்மாள் என்ற 50 பெண் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உடனடியாக அங்கு படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி நாயகம், கோமலம்,கெங்கையம்மாள்,பிரேமா ஆகிய 4 பெண்களை மீட்டு புதுவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காரில் வந்த சென்னையை சேர்ந்த 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலையில் ஏற்பட்ட விபத்தால் இரண்டு மீனவ பெண்கள் உயிரிழந்த சம்பவமாக பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவருக்கு 1 லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.