தமிழ்நாடு

”உயர்கல்விக்கு அனைத்து உதவிகளையும் அரசே செய்யும்”... மாணவி நந்தினியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினியின் உயர்கல்விக்கு அனைத்து உதவிகளையும் அரசே செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

”உயர்கல்விக்கு அனைத்து உதவிகளையும் அரசே செய்யும்”... மாணவி நந்தினியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (9.05.2023) முகாம் அலுவலகத்தில், 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ச. நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பள்ளிக்கல்வித் துறையால் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 %, மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வு முடிவில் திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

”உயர்கல்விக்கு அனைத்து உதவிகளையும் அரசே செய்யும்”... மாணவி நந்தினியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இந்நிலையில் இன்று மாணவி ச. நந்தினி தனது பெற்றோர் மற்றும் ள்ளி தலைமை ஆசிரியையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், "கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து" என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் "படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்" எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன்.

அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன். எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்! "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories