தமிழ்நாட்டில் குட்கா தடை, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்கத் தடை குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட சுகாதார அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாநகராட்சி நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 106 அறிவிப்புகள் கடந்த சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகள் செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பாழடைந்த கட்டடங்களைப் புதிதாகக் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமக்கு நாமே திட்டம் மூலம் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. மக்களை தேதி மருத்துவத்தில் இதுவரை 1 கோடியை 47 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளார்கள். விரைவில் 500 மருத்துவமனைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த மருத்துவமனைக்கு மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மாம்பழங்கள், வாழைப்பழங்கள், தர்பூசணிகள் பழுக்க வைக்க ரசாயன கற்களைப் பயன்படுத்துகிறார்கள் அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரமான குடிநீர் வழங்கப்படுகிறதா? தரமான குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் குட்கா, போதைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் இல்லை என்ற நிலையை மாற்ற அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 23 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் உள்ளது. 30 புதிய செவிலியர்கள் பயிற்சி கல்லூரிகள் தேவை குறித்து என ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்தோம். அதன்படி 11 புதிய செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார்.