தமிழ்நாடு

“சிந்து - கீழடியில் கிடைத்த கருப்பு - சிவப்பு நிறக் குறியீடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

இதே கருப்பு சிவப்பு வண்ணம் தான் கீழடியில் கிடைத்த பொருட்களிலும் காணப்படுகிறது. அதனால்தான் அதனை ஏற்பதற்கு சிலருக்கு மனம் வரமாட்டேன் என்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“சிந்து - கீழடியில் கிடைத்த கருப்பு - சிவப்பு நிறக் குறியீடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.4.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  “ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை” நூலினை வெளியிட்டு ஆற்றிய உரை.

கடல் கடந்தவன் தமிழன்

'இமயத்தில் புலிக் கொடியை பொறித்தவன் தமிழன்

கடாரத்தை கொண்டவன் தமிழன்

ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்' – என்று பெருமை பொங்கப் பேசிய பேரறிஞர் அண்ணா பெயரில் அமைந்துள்ள இந்த நூலகத்தில், சிந்து முதல் வைகை வரையிலான 'ஒரு பண்பாட்டின் பயணம்' என்ற நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'ஆற்றோரம்' என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை, மாணவர்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய உரை அந்த உரை!

'ஆற்றோரம்' என்பது மேடையில் வைத்து கொடுக்கப்பட்ட தலைப்பு. சிந்திப்பதற்கு நேரமின்றி கொடுக்கப்பட்ட தலைப்பு. அண்ணாவை மாணவர்களெல்லாம் சோதிக்க நினைத்த தலைப்பு. பலரும் ஆற்றோரம் என்றவுடன் அதில் எழில் கொஞ்சும் இயற்கை அழகைப் பற்றி அண்ணா பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மாணவர்களுக்குத் தேவை உலக வரலாறு, மனித குல வரலாறு என்று நைல் நதி, கங்கை நதி, காவிரி நதி ஆகிய மூன்று ஆற்றோரங்களில் உதித்த மனித நாகரிகம் பற்றி விரிவாக உரையாற்றினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

அறிவார்ந்த அந்த உரையில், தமிழினத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது திருக்குறள் தோன்றுவதற்கு ஏதுவான பண்பாடு வளர்ந்த இனம், அகமும் புறமும் பிறப்பதற்கு ஏதுவான நாகரிகம் வளர்ந்த இனம், கங்கைக் கரையில் ஆரியர்கள் குடியேறுவதற்கு முன்னரே அகில இந்தியாவிலும் பரவி வாழ்ந்த இனம் தமிழ் இனம் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் வரலாற்றை குமரி முனையில் தொடங்கி வரைந்தால்தான் நிறைவுடையதாகும் என்பதைக் குறிப்பிட்டு அவர் உரையாற்றினார். இப்படி ‘ஆற்றோரம்’ தலைப்பில் மட்டுமல்ல. தான் பேசிய பல்வேறு மேடைகளில் 'கங்கைக் கரையில் அல்ல; எங்களின் வைகைக் கரையில் இருந்து வரலாற்றைத் தொடங்க வேண்டும்' என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

பேரறிஞர் அண்ணா சொன்ன கடமையைத்தான், அவரது தம்பிமார்களுள் ஒருவரான அருமைச் சகோதரர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார்.

பேரறிஞர் அண்ணாவின் தம்பி என்று சொன்னதை அவர் அன்போடு ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி இருந்தாலும் – அதிலிருந்து இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.

பொதுவாக இளமைக் காலத்தில் தமிழ் ஆர்வம், தமிழ்ப் பற்று உள்ள இளைஞர்கள் இதுபோன்ற இந்திய ஆட்சிப் பணிக்கு வந்த பிறகு அதனை அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். காரணம், எங்கே சிக்கல் வருமோ - யாராவது இடைஞ்சல் தருவார்களோ - என்று நினைத்து தங்களது தமிழ் ஆர்வத்தை நெஞ்சுக்குள் பூட்டி வைத்துக் கொள்வார்கள். ஆனால், ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் அப்படிப்பட்டவர் அல்ல. ஆட்சிப் பணியோடு சேர்ந்து - வரலாற்றின் மூடிய பக்கங்களைத் திறந்தார். தனது எழுதுகோலை, தமிழின வரலாற்றைத் திறக்கும் திறவுகோலாக மாற்றிப் பயன்படுத்தினார்.

'சிந்து வெளிப் பண்பாட்டில் திராவிட அடித்தளம்' என்ற அவரது நூல் 2016-ஆம் ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக ஒரு பண்பாட்டின் பயணம் இன்று வெளியாகி உள்ளது.

‘Journey of a civilization - Indus to Vaigai’ என்ற அவரது ஆங்கில நூல், இதே அண்ணா நூலகத்தில்தான் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சிந்துவெளி மற்றும் தமிழ் ஆய்வுப் பரப்பில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற அந்த நூலை, சிறப்பு விருந்தினர்களுக்கு இப்போதெல்லாம் நான் பலமுறை பரிசாக வழங்கி இருக்கிறேன். இன்று அதனுடைய தமிழ் வடிவத்தை வெளியிடுவதை எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.

‘தமிழினத் தலைவர்’ கலைஞர் அவர்கள் இன்று இருந்திருந்தால் இந்த புத்தகக் கருவூலத்தைப் பார்த்து அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்திருப்பார். ஏனென்றால், நம்முடைய ஆர்.பாலகிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பு வைத்திருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். 'திருவாரூர் மாப்பிள்ளை' என்றுதான் அவரை அழைப்பார். மாணவராக இருந்தபோதே அரசியல் ஈடுபாடு அதிகம் கொண்டவர் பாலகிருஷ்ணன் அவர்கள்.

அவரே சொன்னார், அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்தற்காக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்; பின்னர் மதுரை யாதவர் கல்லூரியில் சேருகிறார்; கல்லூரியில் பேசுவதற்கு தலைவர் கலைஞர் அவர்களை அழைக்க வருகிறார்; நெருக்கடி நிலை, கழக ஆட்சி கலைக்கப்பட்ட நேரம் அது. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார், “இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்னை உங்கள் கல்லூரிக்கு அழைக்கக் கூடாது. நானும் வரக்கூடாது. அது கல்லூரிக்கும் நல்லதல்ல, தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் நல்லதல்ல, உங்களுடைய எதிர்காலத்துக்கும் நல்லதல்ல” என்று ஒரு தலைவராக மட்டுமல்ல, ஒரு தந்தை இடத்தில் இருந்து கலைஞர் அவர்கள் அவருக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்.

அதன்பிறகு படித்து - வளர்ந்து – ஐ.ஏ.எஸ் ஆகி - உயர் பதவிகளை அடைந்த பிறகும் தலைவர் கலைஞரைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் நம்முடைய திரு.பாலகிருஷ்ணன் அவர்கள். இதை எல்லாம் அவர் கட்டுரையிலே வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார்.

“தாய்மொழிவழிக் கல்வி, மாநில உரிமைகள், சமூகநீதி, சமவாய்ப்பு போன்றவற்றுக்காக கலைஞர் போன்ற தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி அந்த சூழலை ஏற்படுத்தியிருக்காவிட்டால் - குடிமைப் பணித் தேர்வைத் தமிழில் எழுதும் உரிமை எனக்குக் கிடைத்திருக்காவிட்டால் - இன்றைய தேதியில் நான் எங்கே இருந்திருப்பேன்?' - என்று உருக்கமாக எழுதி இருக்கிறார்.

அதனால்தான், இத்தகைய பாலகிருஷ்ணன் எழுதிய நூலைப் பார்க்க கலைஞர் இல்லையே என்ற ஏக்கத்தை நான் குறிப்பிட்டேன். 'திருவாரூர் மாப்பிள்ளை’ எழுதிய நூலை வெளியிட அவரே இங்கு வருகை தந்திருப்பார்.

இந்த நூலை நவீனத் தரத்தோடு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு என்னுடைய பாராட்டுகளை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

* எல்லீஸ், எட்கர், தர்ஸ்டன், மெக்கென்சி, ராபர்ட் ஆண்டர்சன் என அதிகாரிகளாக இருந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டு எத்தனையோ பேர் இருந்திருக்கின்றனர். ஏன், இப்போது தலைமைச் செயலாளராக இருக்கக்கூடிய இறையன்பு அவர்கள், முதன்மைச் செயலாளராக இருக்கக்கூடிய உதயச்சந்திரன் அவர்கள் போன்றோர் அதிகாரிகளாகவும், ஆர்வலர்களாகவும் இருப்பதை நாம் அறிவோம். எனக்கு முன் பேசியவர்கள் ஆய்வு நோக்கத்துடன் பல்வேறு கருத்துகளை விளக்கி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், சங்க இலக்கியங்களில் தமிழர் தம் பெருமையை திராவிட இயக்கத்தவர்கள் மேடையில் முழங்கிய போது, இதெல்லாம் இலக்கியம்தானே... வரலாறு கிடையாதே என்று சிலர் அதனை நிராகரித்தார்கள். அந்தச் சொல்லியல் ஆதாரங்கள் அனைத்துக்கும் இப்போது தொல்லியல் ஆதாரம் கிடைத்துவிட்டது. அதனை பதிவு செய்ததைத்தான் பாலகிருஷ்ணன் அவர்கள் அளப்பெரிய பணியாக செய்து முடித்திருக்கிறார்.

* சிந்துப் பண்பாடு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது என்றால் அங்கு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? என்ற கேள்விக்கான விடைகளை பாலகிருஷ்ணன் அவர்கள் ஆய்ந்து சொல்கிறார்... “அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ்!

வாழ்ந்த மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர்கள் என்பதை நிறுவி இருக்கிறார். சிந்துப் பரப்பில் திராவிடக் கருதுகோள்தான் முதன்மையானது என்கிறார். சிந்துப் பண்பாடு பரவியிருந்த இடங்கள் என்பது குஜராத், மகாராஷ்டிரம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகியவை உள்ளடக்கிய பகுதிகள்.

இந்தப் பகுதிகளில் எத்தனை தமிழ்ச் சொற்கள் இப்போதும் வழங்கப்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இவரது ஆய்வு!

* கொற்கை – வஞ்சி - தொண்டி ஆகிய தமிழ்ப் பெயர்கள் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறது.

* ஊர் – பட்டி - பள்ளி ஆகிய தமிழ்ப் பெயர்கள் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானத்திலும் இருக்கிறது.

* காவேரி வாலா - மாண்டியன் வாலா – தணிகே - குமரன் வாலி -

மத்ரை - வன்னி ஆகிய பெயர்கள் இடப் பெயர்களாக இருக்கின்றன என்கிறார்.

* வேல் என்ற தமிழ்ச் சொல் குஜராத்தில் பல இடங்களில் இருக்கிறது என்கிறார்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மையான பெயர்கள், இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் இருக்கிறது என்பதை இடப்பெயராய்வு முறை மூலமாக அவர் நிரூபிக்கிறார்.

* மொகஞ்சதரோவில் இருந்த திமில் கொண்ட காளை தான், அலங்காநல்லூரில் துள்ளிக் குதிக்கிறது.

எனவே சிந்துவெளிப் பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் தகுதி தமிழுக்கே உண்டு என்பது இவரது ஆய்வினுடைய முடிவு!

'சிந்து வெளி விட்ட இடமும்

சங்க இலக்கியம் தொட்ட இடமும்' –

என்று பாலகிருஷ்ணன் அவர்கள் அடிக்கடி சொல்வார். மற்ற ஆய்வாளர்கள் விட்ட இடத்தை பாலகிருஷ்ணன் அவர்கள் தொட்டு விட்டார் என்றே நான் சொல்வேன்.

இந்தப் புத்தகத்தில் எனது மனம் கவர்ந்த பகுதி 'திராவிடச் சிவப்பு' என்ற பகுதி. சிந்து வெளிப்பண்பாட்டின் நிறக் குறியீடு என்பது கருப்பு, சிவப்பாக இருப்பது எனக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்று நான் நம்புகிறேன்.

'கருப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்' - என்று தொல்காப்பியம் சொல்வதை மேற்கோள் காட்டுகிறார். சிந்துவெளிப் பண்பாட்டில் சுட்ட செங்கற்கள், செம்பு, மட்பாண்டம் ஆகியவை சிவப்பாக உள்ளன. கருப்பையும் சிவப்பையும் நிறமாக மட்டுமல்ல, பண்புப் பெயர்களாகவும் சொல்கிறார். குருதி, வலிமை, வீரம், சினம், வெற்றி, உன்னதம், ஒழுங்கு ஆகிய பண்புகளை கருப்பு, சிவப்பு வண்ணங்கள் அடையாளப்படுத்துவதாக பாலகிருஷ்ணன் அவர்கள் சொல்லி இருக்கிறார்.

இதே கருப்பு சிவப்பு வண்ணம் தான் கீழடியில் கிடைத்த பொருட்களிலும் காணப்படுகிறது. அதனால்தான் அதனை ஏற்பதற்கு சிலருக்கு மனம் வரமாட்டேன் என்கிறது.

இப்போது தமிழ்நாடு அரசின் சார்பில்

* சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்

* தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை

* அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம்

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை

* விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை

* திருநெல்வேலி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி

* தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலை –

என ஏழு இடங்களில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கீழடி அருங்காட்சியகம் மிகப் பிரமாண்டமாகத் திறக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

நம்முடைய அண்மைக்கால ஆய்வுகள் தமிழரின் பழம் பெருமையை மீட்பதாக அமைந்துள்ளன.

சங்ககால வாழ்வியல் - நகர்மய வாழ்வியல் என்பது கற்பனையானது அல்ல. அதற்கான சான்றுகள் பூமிக்கடியில் உள்ளன என்பதை திராவிட மாடல் அரசானது மெய்ப்பித்து வருகிறது.

“இந்திய வரலாற்றை கங்கை சமவெளியில் தொடங்குகிறீர்கள். அதனை காவிரி, வைகையில் தான் தொடங்க வேண்டும்” என்று வின்சென்ட் ஸ்மித் என்ற வரலாற்று ஆசிரியரிடம் சுந்தரம்பிள்ளை அவர்கள் சொன்னதாக பாலகிருஷ்ணன் அவர்கள் சொல்கிறார். அதற்கு வின்சென்ட் ஸ்மித், 'இப்போது அதை நடைமுறையில் பின்பற்ற முடியாது. ஆதிகால திராவிட சமூக அமைப்புகள் பற்றி கிடைக்கும் தரவுகள் ஆராயப்படவில்லை' என்று சொல்லி இருக்கிறார்.

இத்தகைய பதிலை இப்போது யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் கொடுப்பதற்கு பாலகிருஷ்ணனின் இந்த புத்தகம் ஒன்றே போதும்.

''இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்" என்று நான் சொல்லி வருகிறேன். இதுதான் இந்த திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த நோக்கத்துக்கு துணையாக - ஆய்வுத் தூணாக பாலகிருஷ்ணன் அவர்களுடைய இந்த நூல் அமைந்திருக்கிறது.

தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே - என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அது போல துறைதோறும் தனது தொண்டை பாலகிருஷ்ணன் அவர்கள் ஆற்ற வேண்டும் என்று கேட்டு, அவருக்கு உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories